Skip to main content

“டெங்கு” கோவையில் நேற்றும் 4 பெண்கள் சாவு; பலி எண்ணிக்கை 52ஆக உயர்வு

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
“டெங்கு” கோவையில் நேற்றும் 4 பெண்கள் சாவு; பலி எண்ணிக்கை 52ஆக உயர்வு

கடந்த சில நாளாக தமிழகம் முழுவதும் பெருகிவரும், டெங்கு காய்ச்சல் காரணமாக,  திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்களும், கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரும் கோவை மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தனர். 

திருப்பூர் மாவட்டம், மங்கலம் காவல் நிலையை எல்லைக்கு உள்பட்ட சாமளாபுரம் பேரூராட்சியின் 15-வது வார்தில் உள்ள கள்ளப்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி கவிதா (எ) ரேவதி (வயது-37).

இவர்கள் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளிகள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சலால் கவிதா பாதிக்கப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம், சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6-ஆம் தேதி கவிதாவைச் சேர்த்தனர். மூன்று நாள்கள் அங்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் அதிகரிக்கவே, கோவையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அனுப்பி வைத்தனர்.

அங்கு சென்ற சில மணி நேரங்களில் கவிதா உயிரிழந்தார்.

கவிதாவின் சாவுக்கு டெங்கு காய்ச்சலே காரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக, இறந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஐந்து முக்கு பகுதியில் டயர் விற்பனைக் கடை நடத்தி வருபவர் குணசேகர்(வயது-45). இவரது மகள் அருந்ததி (வயது-12).

இவர் வரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அருந்ததி, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து சனிக்கிழமை தாராபுரம் திரும்பினார்.

வீட்டுக்கு சென்றதும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் ஏற்படவே தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு,  கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், டெங்கு காய்ச்சல் தாக்கியிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அருந்ததி திங்கள்கிழமை மதியம் உயிரிழந்தார்.

கோவை மாநகர பகுதியான செல்வபுரம், சேரன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா (வயது-63). இவர் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அக்டோபர் 7-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரது இரத்த மாதிரிகளை பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆயிஷா, திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இதுபோலவே, திருப்பூர் மாநகராட்சியில் உள்ள காமாட்சி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா (வயது-25). கணவருடன் பைக்குள் சென்றபோது சாலை விபத்தில் சிக்கிய பிரியா, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அக்டோபர் 4-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. அவரது இரத்த மாதிரிகளை பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி பிரியாவும் உயிரிழந்தார்.

கோவை மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கடந்த சில தினங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 38-பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு இருவரும், நிமோனியா காய்ச்சலுக்கு இருவரும், வைரஸ் காய்ச்சலுக்கு 10-பேரும் என 52-பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்