இயக்கத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
ஊடகங்களில் இருக்கும் சில பிரிவினர் இயக்கத்திற்கு எதிராக தொடங்கியுள்ள அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் வன்மையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது. மேலும் , அவர்களுடைய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உறுதியான ஆதாரங்களை காட்டுமாறு அவர்களுக்கு சவால் விடுத்திருக்கின்றது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ)வின் அறிக்கை என்று கூறப்படுகின்ற அறிக்கையை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால்,இது RSS போன்ற ஹிந்துத்துவ அமைப்புகள் செய்து வந்த பழைய பொய் பிரச்சாரத்தின் மறுபதிப்பு என்பதை தாண்டி வேறொன்றுமில்லை. என்.ஐ.ஏ வை மேற்கோள் காட்டி ஊடகங்கள் பட்டியலிடும் வழக்குகள் மிகவும் அற்பமானவை ஆகும். மேலும், அவ்வழக்குகள் ஒரு இயக்கமாக பாப்புலர் ஃப்ரண்ட்-டுடன் சற்றும் தொடர்பற்றவை. இந்த தவறான அவதூறு பிரச்சாரத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கோள்ள பாப்புலர் ஃப்ரண்ட் முடிவுசெய்துள்ளது.
மற்றுமொரு தீர்மானத்தில் என்.ஐ.ஏ அறிக்கையின் மீதான அதிருப்தியை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு வெளிபடுத்தியுள்ளது. மேலும், தேசம் நம்பக்கூடிய விதத்தில் நடுநிலை மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு என்.ஐ.ஏ அமைப்பை அது கேட்டுகொண்டுள்ளது. ஹிந்துத்துவ அமைப்புகள் நடத்திய மாலேகான், அஜ்மீர், சம்ஜோதா, மக்கா மசூதி போன்ற குண்டு வெடிப்பு வழக்குகளில் என்.ஐ.ஏ மிகவும் மிருதுவாக நடந்துகொள்கிறது என்ற கருத்து ஏற்கனவே இருக்கின்றது. இது போன்ற பெரும்பான்மையான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய ஜாமீன் மனு மீது, நீதிமன்றங்களில் எந்த எதிர்ப்பையும் என்.ஐ.ஏ காட்டவில்லை. மேலும், நீதிமன்றங்களில் அவர்களுக்கு எதிராக மென்மையாக நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டதாக சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட குற்றங்களை விசாரணை செய்வதற்கு பதிலாக என்.ஐ.ஏ அதன் வரம்புகளை எல்லாம் மீறி இஸ்லாமிய இயக்கங்களை பின் தொடர்வதையே வேலையாக செய்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்.ஐ.ஏ வுடைய பெயரில் வெளிவரும் சமீபத்திய அறிக்கைகள் அதன் மீதான நம்பகத்தன்மையை மேலும் குறைத்துள்ளது.
மற்றொரு தீர்மானத்தில், ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் மத்திய அரசின் முடிவானது மனிதாபிமானமற்றது என்று இந்த கூட்டம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. இது அகதிகளுக்கான அடிப்படை மனித உரிமை மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை மீறுவதாக உள்ளது. துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் ஆகியவற்றிலிருந்து தப்பி ஓடுகின்ற மக்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்கான நமது நீண்ட நெடிய பாரம்பரியத்திற்கு எதிராக இது உள்ளது. 40,000 ரோஹிங்கிய அகதிகளை தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மத்திய அரசு கவலை கொள்வது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது, இது மியானமர் அரசுடைய நிலைபாட்டிற்கு ஆதரவாக உள்ளது. நமது தேசத்தில் தொடர்ந்து பல இன்னல்களுக்கு ஆளாகி வரும் ரோஹிங்கிய மக்களுக்கு நிவாரண உதவிகளை அதிகப்படுத்தவும், அரசாங்கம் தனது கொள்கையை மாற்றிக்கொள்ளும் விதத்தில் அழுத்தம் கொடுக்கவும் அனைத்து இயக்கங்களும் மனித உரிமை குழுக்களும் முன் வர வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டு கொண்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் E.அபுபக்கர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தேசிய நிர்வாகிகள், மண்டல தலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.