எல்லாவற்றுக்கும் நீதிமன்றத்தை நாடும்
சூழல் ஏற்பட்டுள்ளதே?மு.க.ஸ்டாலின் பேட்டி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (25-09-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
ஸ்டாலின்: டெங்கு பிரச்னை குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் தொடர்ந்து பலமுறை குரல் கொடுத்தும், அந்த துறையின் அமைச்சராக உள்ள குட்கா புகழ் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் விஜயபாஸ்கர் , “டெங்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது, ஆயிரக்கணக்கான களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்”, என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, உண்மையாகவே அப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடவே இல்லை. இந்த ஆட்சியில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும், தங்களுடைய பதவிகளை தக்கவைத்துக் கொள்வதில் தான் அக்கறை செலுத்துகிறார்களே தவிர, மக்களுடைய இன்னல்கள் பற்றி, குறிப்பாக டெங்குவால் பாதிக்கப்பட்டு பல உயிர்களை இழக்கும் நிலை ஏற்பட்டு இருப்பது பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
செய்தியாளர்: டெங்கு காய்ச்சல் பற்றியும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் குறித்தும் தவறான தகவல்களை அரசு வெளியிட்டு வருகிறதே?
ஸ்டாலின்: இதுபற்றிய உண்மையான செய்திகளை குட்கா புகழ் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். விஜயபாஸ்கரிடம் கேட்டு வெளியிட வேண்டும்.
செய்தியாளர்: தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், 3 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருந்தும், இந்த அரசு யாருக்கும் வேலை வழங்காமல் இருக்கிறதே? அதேபோல, மழை - வெள்ளம் வந்தால் தாக்குப்பிடிக்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதே?
ஸ்டாலின்: ஒரே வரியில் பதில் சொல்வதெனில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் ‘குதிரை பேர’ ஆட்சியைப் பொறுத்தவரையில், எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அவர்களுடைய கவலைகள் எல்லாம், அங்குள்ள எம்.எல்.ஏ.க்களுடன் எப்படி குதிரை பேரம் நடத்தி, தங்கள் பக்கம் இழுப்பது, ஆட்சியை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதில் தான் உள்ளதே தவிர, மக்களைப் பற்றியும், நாட்டை பற்றியும், வேலையில்லாத பிரச்னை, மழை வெள்ளம் வரும்போது மக்கள் பாதிக்கப்படாமல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுப்பது உள்பட எதைப்பற்றியும் அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.
செய்தியாளர்: போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருக்கிறார்களே?
ஸ்டாலின்: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல்நிலை ஏற்படும். அப்படியொரு நிலை வந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. இதையெல்லாம் மனதில் வைத்து, அவர்களை உடனே அழைத்துப்பேசி, அவர்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தியாளர்: ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றுக்கும் நீதிமன்றத்தை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளதே?
தளபதி: சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று பலமுறை சொல்லியும், கூட்டாமல் இருக்கிறார்கள். மாண்புமிகு கவர்னரை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைத்தோம். அவரும் அதுபற்றி கவலைப்படவில்லை. அவர் கவலைப்படுகிறாரோ இல்லையோ, பிஜேபியின் தலைமையில் இருப்பவர்களின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு இருக்கிறது. அதனால், நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம்.
நாங்கள் நீதிமன்றத்தை நாடியவுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், குட்கா விவகாரத்தைப் பயன்படுத்தி ஒரு நடவடிக்கையை எடுத்தார்கள். அதையும் எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றோம். அதேபோல், இப்போது தினகரன் அணியைச் சேர்ந்த 19 பேரின் எம்.எல்.ஏ. பதவிகளைப் பறித்தார்கள். அவர்களும் நீதிமன்றத்துக்கு சென்றார்கள்.
இதற்கிடையில், ஏற்கனவே இந்த ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய நேரத்தில், ஆட்சியை எதிர்த்து ஓட்டுப்போட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட அநியாயங்களுக்கு, சர்வதிகாரத்துக்கு, ஜனநாயக படுகொலைகளுக்கு எல்லாம் சபாநாயகர் எந்தளவிற்கு துணை நிற்கிறார் என்பதைப் பார்த்து, அதற்காகவும் நாங்கள் இப்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.