தூத்துக்குடி அருகே 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை நீர்பாசன அடைவுத் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு


ஆய்வின் சிறப்புச் செய்தியாக இன்று ’முறம்பன்’ என்று அழைக்கப் படுகிற இந்த ஊர் சோழர்காலத்தில் ’நுரம்பன்’ என அழைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. அதே போல் இதனருகே ’பன்னூர்’ என்ற ஓர் ஊர் இருந்ததாகவும் தெரிகிறது. சோழர் காலத்துக்கு உரியதாக கருதப்படும் இந்த கல்வெட்டு, கி பி 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, அல்லது 14 நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம். இந்த அடைவுத் தூணின் கல்வெட்டு படி,

1.ஸ்வஸ்திஸ்ரீ
2.நுரம்பனூ
3.ர்ருகு நாலா
4.ம் அடைவு பி
5.டாரன் கம்பன்
6.னான சோழகுல
7.சுந்தர மூவேந்த
8.வேளான் தன்ம{ம்}

1.ஸ்வஸ்திஸ்ரீ
2.த் தம்ம{ம்} அர
3.ங்கன் சேர
4.ளன்
{சேரளன் - சோளன்}

1.ஸ்வஸ்திஸ்ரீ
2.பன்னூ{ர்}
3.கு மூத்த அ
4.டவு{ மாலய
5. த்திகைய{ன்}
6.உத்தம பாண்{டி}
7.ய மூவேந்த வே
8.ளார்

1.{பி}லாயம்
2.வீரபாண்டி{ய}
3.மூ வேந்த வே
4.{ளா}ர் தன்மம் உ

1.ஸ்வஸ்திஸ்ரீ
2.ரம்பனூ
3.{த்}த அடை..
4.{தென்}
ஒழுங்கு படுத்தப்பட்ட தூண்களாக இருப்பினும் அவற்றின் கீழ்பகுதி நிலத்தில் ஊன்றுவதற்கு ஏதுவாக ஒழுங்கற்றவையாக காணப்படுகின்றன. ‘அடவு’ அல்லது ’அடைவு’ என்பது அவர்கள் செய்த தன்மமாக (கொடை) தெரிகிறது. மூத்த அடவு, நான்காம் அடைவு என்றும் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
’தர்மத்தாய் ஊருணி’ எனப்படும் இந்த ஏரியானது நுரம்பன்{முறம்பன்}, பன்னூர் ஆகிய இரண்டு ஊர்களுக்கு நீர்பாசனம் செய்வதற்கு பயன்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஏரி அக்காலத்தில் மடை, மதகு ஆகியவற்றுடன் கூடிய பெரிய ஏரியாக இருந்திருக்கலாம். அதே சமயம் ’நுரம்பனூருக்கு’, ’பன்னூர்க்கு’ என்ற சொல்லாட்சிகள் உள்ளதால் அந்தந்த ஊர்களுக்கு அந்தந்தப் பகுதி(அடைவு) நீர்ப்பாசன வசதியை உரிமையாக்கியதாகவோ அல்லது அதனை பயன்படுத்தும் வரிசை கிரம (மரியாதையை) உரிமையைக் கொடுத்ததாகவோ கருதலாம். எனவே இத்தூண்கள் கொடையாக கொடுக்கப்பட்ட அடையாளத் அடைவுத்தூண்களாகவே நாம் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
1.உத்தம பாண்டிய மூவேந்தவேளார்
2.வீரபாண்டிய மூவேந்த வேளார்
3.பிடாரன் கம்பனான சோழகுல சுந்தர மூவேந்த வேளார்
4.அரங்கன் சோளன்(சேரளன்)
’மூவேந்த வேளார்’ எனும் பட்டத்துக்குரிய அரச உயர் அதிகாரிகள், இந்த ஏரிக்கு தன்மமாக அடைவுத் தூண்களை தந்துள்ளார்கள் என்பது தெளிவு. கல்வெட்டில் எழுத்துகள் அழிந்திருப்பதாலும் விடுபட்டு இருப்பதாலும் இது இன்னும் மீளாய்வுக்கு உட்பட்டதாகவே கருதுகிறேன் என்றும் தெரிவித்தார்.
-பகத்சிங்