துரோகிகளால் கட்டப்பட்டதா தாஜ்மகால்? பாஜக எம்.எல்.ஏ.வின் சர்ச்சைக்குரிய கருத்து!
தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது என்றும், அது இந்திய வரலாற்றுக்கு களங்கம் விளைவிக்கிறது என்றும் பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய சங்கீத் சோம், ‘உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களுக்கான பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கப்பட்டதை எண்ணி பலரும் வருத்தம் கொள்கின்றனர். நாம் எந்த வரலாற்றைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்? தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜகான் அவரது அப்பாவையே சிறையில் அடைத்தவர். அவர் இந்துக்களைக் கொல்ல நினைத்தவர். இதுதான் வரலாறு என்றால், இதனை நிச்சயமாக நாம் மாற்றுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். முகலாய மன்னர்களான பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் இந்தியக் கலாச்சாரத்தின் துரோகிகள். அவர்கள் பெயர்கள் இந்திய வரலாற்றில் இருந்து நீக்கப்படவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
இதை ஆதரித்து பாஜக எம்.பி. அன்சுல் வெர்மா, ‘தாஜ்மகால் வெறும் சுற்றுலாத்தளம் மட்டுமே. அதை இந்திய கலாச்சாரத்துடன் இணைத்துப் பேசவேண்டிய கட்டாயமில்லை. சங்கீத் சோம் பேசியதில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை. இதை அரசியலாக்க வேண்டாம்’ எனப் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தாஜ்மகாலுக்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜகவைச் சேர்ந்த சிலரும் இதே கருத்தைப் பரப்பி வருகின்றனர்.