Skip to main content

ஒடிசா ரயில் விபத்து; அதிகரிக்கும் உயிரிழப்புகள்; மீட்புப் பணிகள் தீவிரம்

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

Odisha train accident; increasing casualties; Rescue operations are in full swing

 

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி 233 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்த விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கும் நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒடிசாவில் பேருந்துகள் ஆம்புலன்ஸ்களாக தற்காலிகமாக மாற்றப்பட்டு மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகின்றனர். அதே நேரம் தமிழகத்தில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

விபத்து நடந்த இடத்தில் விமானப்படையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாஹாநாகா அருகே தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்தினைத் தொடர்ந்து ஒடிஷா மாநிலம் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க காங்கிரஸ் தொண்டர்கள் உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்