edappadi pazhaniswamy condemns action on jagan moorthy arrest

பெண்ணை மிரட்டிய வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தியை கைது செய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (14--06-25) 50க்கும் மேற்பட்ட திருவாலங்காடு போலீசார் வாகனங்களில் வந்து குவிந்தனர்.

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த ஏராளமான கட்சித் தொண்டர்கள் அங்கு குவிந்து, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்ணை மிரட்டிய விவகாரத்தில் கைது செய்ய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்த நிலையில், ஒரு கட்சித் தலைவரை இப்படி நடத்தலாமா? என்று கட்சித் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, அவர்கள் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், ஜெகன் மூர்த்தியை கைது முயற்சிக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியை ஸ்டாலின் மாடல் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம். அதிமுக எப்போழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை. ஆனால் மதுரை, வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தையே பாதுகாக்க திராணியற்ற இந்த பொம்மை முதலமைச்சர், எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக மட்டும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட பட்டாலியனை (Battalion) ஏன் அனுப்ப வேண்டும் ?

பட்டியலின மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் ஜெகன்மூர்த்தியை குறிவைத்து நடத்தப்படும் இந்த அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என்பது, நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் அதிமுக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே காட்டுகிறது. இப்படிப்பட்ட கைது முயற்சிகளால் அதிமுக கூட்டணி கட்சிகளை மிரட்டி, தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று பகல்கனவு காணும் தீயசக்தி திமுகவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. ஆட்சி, அதிகாரம் என்பது மக்களுக்கு நன்மை செய்ய மட்டும் தான் இருக்கிறதே தவிர, எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயல்வதற்கு அல்ல என்பதை மு.க.ஸ்டாலின் உணரவேண்டும். இந்த கொடுங்கோன்மைக்கெல்லாம் உரிய பதிலை தமிழ்நாட்டு மக்கள் 2026-ல் திமுகவிற்கு நிச்சயமாக தருவார்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.