காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை!
மகாத்மா காந்தியைக் குறித்து அவர் உயிரோடு இருந்த சமயத்திலும் இறந்த பிறகும் பல சர்ச்சைக்குரிய கருத்துகள் பரவியுள்ளன.

அவற்றில் பல காந்தியின் புகழைக் கெடுப்பதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திட்டமிட்டு பரப்பியவை. வேறு சிலவோ காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை முறை தொடர்பான விஷயங்கள் ஆகும்.
ஆனால், இப்போது அவருடைய அகிம்சைக் கொள்கையையே கேள்விக்குள்ளாக்கும் வகையிலான சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. காந்தி உலக நடப்புகள் குறித்து அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வெளியிடுவார்.
அப்படி வெளியிடும் கட்டுரைகளை அவருடைய செயலாளராக இருந்த பியாரிலால் என்பவர்தான் சரிபார்த்து அனுப்புவார். ஆனால் காந்தி எழுதிய பல கட்டுரைகளை பியாரிலால் பொதுவில் வெளியிடாமல் தவிர்த்து விட்டார் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி.ஆர்.குமாரசாமி எழுதியுள்ள மகாத்மா காந்தி அண்ட் தி ஜூயிஸ் நேஷனல் ஹோம் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் கொலைபாதகச் செயல்களை எதிர்த்து யூதர்களை அகிம்சை வழியில் போராடச் சொன்ன காந்தி, பாலஸ்தீனத்திற்காக அராபியர்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தார் என்று குமாரசாமி தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
இது காந்தியின் அடிப்படைக் கோட்பாட்டை அவரே மீறியதாகும் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால், காந்தி உலகின் எந்த மூலையில் வன்முறைப் போராட்டம் நடந்தாலும் அதை ஆதரித்ததில்லை என்று ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் இந்திய - அரபு கலாச்சார மையத்தின் முன்னாள் இயக்குனர் ஸிக்ருர் ரஹ்மான் கூறியிருக்கிறார்.
"இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமோ, அதுபோல, பாலஸ்தீனம் அராபியர்களுக்கே சொந்தம் என்று காந்தி கூறியிருக்கிறாரே தவிர, பாலஸ்தீனர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாக ஒருபோதும் அவர் கூறியதில்லை" என்று ரஹ்மான் கூறியிருக்கிறார்.
காந்தியைப் பற்றி குமாரசாமி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எந்த விஷயத்திற்கும் ஆதரமில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் காந்தி இஸ்ரேல் தொடர்பாகவும் பாலஸ்தீனம் தொடர்பாகவும் தெரிவித்த கருத்துக்களை அவருடைய செயலாளர் பியாரிலால் வெளியிடாமல் மறைத்துவிட்டார் என்று குமாரசாமி எழுதியுள்ளார்.
-ஆதனூர் சோழன், நன்றி - தி இந்து ஆங்கிலம்