Skip to main content

விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் சாதி; அடுத்த சர்ச்சையைக் கிளப்பிய சமாஜ்வாதி எம்.பி!

Published on 16/05/2025 | Edited on 16/05/2025

 

samajwadi MP to stir up controversy about Wing Commander Vyomika Singh's caste

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. கடந்த 3 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. 

பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை லெப்டினண்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். பஹல்காம் தாக்குதலில் தங்கள் கணவர்களை இழந்த பெண்களின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பெண் அதிகாரிகளை கொண்டே விவரங்களை வெளியிட வைத்திருந்தது உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம், கர்னல் சோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் ஆகிய இருவரும் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்கள். 

இந்திய நாட்டுக்காக போராடிய கர்னல் சோபியா குரேஷியை இழிவுப்படுத்தும் விதமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையாக மாறியது. பயங்கரவாதிகளின் சகோதரியை வைத்தே அவர்களை சுட்டுக் கொன்றுள்ளோம் என்றும், எங்கள் சகோதரிகளை கைம்பெண்கள் ஆக்கினால், உங்கள் சகோதரி வந்து உங்கள் ஆடைகளைக் களைவாள் என்றும் அவர் பேசியிருந்தார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியை, பயங்கரவாதிகளின் சகோதரி என சித்திரிக்கும் வகையில் பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்த விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

samajwadi MP to stir up controversy about Wing Commander Vyomika Singh's caste

இந்த விவகாரம் அடங்குவதற்குள், மற்றொரு பெண் அதிகாரியான விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் சாதியை வெளிப்படுத்தி சமாஜ்வாதி கட்சி எம்.பி ஒருவர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரும், எம்.பியுமான ராம்கோபால் யாதவ் மொராதாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க அமைச்சர் விஜய் ஷா, கர்னல் குரேஷியை மதத்தின் காரணமாகத் தனிமைப்படுத்தி பேசினார். ஆனால் அவருக்கு, விங் கமாண்டர் வியோமிகா சிங் யார் என்று தெரியாது, ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி பற்றியும் தெரியாது. இல்லையென்றால், அவர்களையும் துஷ்பிரயோகம் செய்திருப்பார்கள். 

நான் உங்களுக்குச் சொல்கிறேன். வியோமிகா சிங் ஹரியானாவைச் சேர்ந்த ஜாதவ், ஏர் மார்ஷல் பாரதி பூர்னியாவைச் சேர்ந்த யாதவ். எனவே மூவரும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் சிறுபான்மை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் முஸ்லிம் என்பதால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். ராஜபுத்திர பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் வியோமிகா சிங்கை அவர்கள் காப்பாற்றியுள்ளனர். ஏர் மார்ஷல் பாரதி பற்றி அவர்களுக்கு எந்த தகவலும் இல்லை. மேற்கூறிய அனைத்து விஷயங்களும் செய்தித்தாளில் இருப்பதால், தலைவர்கள் இப்போது என்ன செய்வது என்று சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மக்களின் மனநிலை மோசமாக இருக்கும்போது, ​​ஆயுதப்படைகளின் சாதனைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த சாதனைகளைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள்” என்று பேசினார். 

சமாஜ்வாதி எம்.பி ராம்கோபால் யாதவ் பேசியதற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இது ஆயுதப் படைகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். ராணுவத்தின் சீருடையை சாதிய கண்ணாடி அணிந்து பார்க்கக் கூடாது. இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரரும் ராஷ்டிர தர்மத்தைச் செய்கிறார்கள், அவர்கள் எந்த சாதி அல்லது மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை’ எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்