
உலக அழகி போட்டியில் பங்கேற்ற வந்த வெளிநாட்டுப் பெண்களின் கால்களை, தெலுங்கானவைச் சேர்ந்த உள்ளூர் பெண்கள் தண்ணீரைக் கொண்டு கழுவிவிட்ட சம்பவம் சர்ச்சையாக மாறியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உலக அழகி போட்டி நடைபெற இருக்கிறது. இந்த விழாவையொட்டி, வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். உலக அழகி போட்டியின் ஒரு அங்கமாக, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான முலுகு மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமப்பா கோவிலுக்கு போட்டியாளர்கள் செல்வதை ஒரு முன்னெடுப்பாக எடுக்கப்பட்டது.
இதற்காக போட்டியாளர்கள், இந்திய முறைப்படி புடவை அணிந்து குங்குமம் வைத்து பூ சூடி கோயிலுக்கு வருகை தந்தனர். அப்போது கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பாக, அவர்கள் வரிசையாக நாற்காலியில் அமரவைக்கப்பட்டனர். போட்டியாளர்களின் பாதங்களுக்கு கீழ் ஒரு தட்டை வைத்து சில பெண்கள் அவர்களுக்கு தண்ணீரை ஊற்றி பாதங்களை கழுவியுள்ளனர். அதனை தொடர்ந்து, அவர்களின் கால்களை துணியை வைத்து துடைத்துவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை மிஸ் வேர்ல்ட் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது குறித்து பா.ஜ.க தலைவர் கிஷன் ரெட்டி கூறுகையில், ‘அதிர்ச்சியூட்டும் வகையில், தெலுங்கானா காங்கிரஸ் அரசு உள்ளூர் பெண்களை உலக அழகி போட்டியாளர்களின் கால்களைக் கழுவி துடைக்க வைத்துள்ளது. இது காலனித்துவ கால மனநிலையை வெளிப்படுத்தும் ஒரு அவமானகரமான செயல்’ எனத் தெரிவித்துள்ளார்.
பட்டியலின, பழங்குடி மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பெண்கள், இந்த செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக மற்ற எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி கட்சி குற்றம் சாட்டி தெலுங்கானாவின் சுயமரியாதையை காங்கிரஸ் அரசு உடைத்துவிட்டது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது.