சபரிமலையில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற நவம்பர் மாதம் மண்டல பூஜை தொடங்க உள்ளது.

அவருடன் தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் அதிகாரிகள் சென்றனர். இரவு 8.30 மணிக்கு பம்பை சென்றடைந்த அவர்கள், அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு சன்னிதானம் சென்றனர். இதற்காக பம்பையில் இருந்து முதல்வர் பினராயி விஜயன் நடந்தே சென்றார். அங்கு அவரை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரையர் கோபாலகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
கடந்த சில மாதங்களாக பிரையர் கோபால கிருஷ்ணனுக்கும் முதல்வர்க்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனால் அதனை மறந்து இருவரும் சபரிமலை வளர்ச்சி பணிகள் குறித்து பேச்சு நடத்தினர். நேற்று காலை பம்பையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், சன்னிதானம் மற்றும் நிலக்கல்லில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்தது. இதில் தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், ஏ.டி.ஜி.பி.மனோஜ் ஆபிரகாம், பிரையர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் முடிந்த பின்னர் பினராயி விஜயன் சபரிமலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிடுகிறார். சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. காலை முதல் அங்கு பூஜைகள் நடந்தன. வருகிற 21-ந் தேதி நடை அடைக்கப்படும்.