ஆதாரைக் காரணம்காட்டி அரிசி மறுப்பு!-
பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!
ஆதார் எண்ணுடன் குடும்ப அட்டையை இணைக்காததால் ரேஷன் கடை ஊழியர்கள் அரிசி வழங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுகுறித்தான வழக்கு இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பலரும் ஆதார் எண்ணுடன் குடும்ப அட்டையை இணைப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டெகா பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆதார் எண்ணுடன் குடும்ப அட்டையை இணைக்காமல் இருந்துள்ளனர். மேலும், ரேஷன் கடையில் அந்த ரேஷன் அட்டையை எடுத்துச்சென்றபோது, ஆதார் எண்ணுடன் அது இணைக்கப்படாமல் இருந்ததால், ஊழியர்கள் அரிசி தர மறுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி உணவிற்கு வேறுவழியின்றி பட்டினி கிடந்ததால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆதார் எண்ணைக் காரணம் காட்டி அரிசி மறுக்கப்பட்டு, அதனால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.