vijay Condolences on tvk State Secretary  saravanan

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியைத் தொடங்கி இருக்கும் நிலையில் கட்சிக்கான முதல் மாநாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியின் வி.சாலை பகுதியில் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அக்கட்சியின் நிர்வாகிகள் நாள் கணக்கில் விக்கிரவாண்டியிலேயே தங்கி மாநாட்டிற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் என்பவரும் கடந்த சில நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டு பணிகளில் ஈட்டுப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் விக்கிரவாண்டியில் இருந்து புதுச்சேரியில் உள்ள வீட்டிற்குத் திரும்பிய சரவணன், தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்

Advertisment

இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு பணிகளை கவணித்து வந்த மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரவணனின் உடலுக்கு கட்சித் தொண்டர்கள், உறவினர்கள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் சரவணனின் உடலை பார்த்துக் கதறி அழுதார்.

இந்த நிலையில் புதுச்சேரியின் மாநிலச் செயலாளர் சரவணன் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்”

Advertisment