Skip to main content

தமிழ்நாடு வெதர்மேன்...

Published on 01/11/2017 | Edited on 01/11/2017
தமிழ்நாடு   வெதர்மேன்

மழை மனிதர் கதை    




                                                                

தமிழகத்தில் மழைக்காலம் என்றாலே நம் ஞாபகத்திற்கு வரும் இருவர், முன்னாள் சென்னை  வானிலை   ஆராய்ச்சி மைய அதிகாரி ரமணன் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன். இப்பொழுது,  ரமணன் ஓய்வு பெற்றுவிட்டார். 'தமிழ்நாடு வெதர்மேன்'  ஃபேஸ்புக் பக்கம் இப்பொழுது  பரபரப்பாகிவிட்டது.  இன்று சென்னையில் மழை வரும், பகலிலும் விட்டு விட்டு மழை பெய்யும்  என்று இவர் ஸ்டேட்டஸ் போட்ட அரை மணிநேரத்தில் ஆயிரத்தி ஐநூறு பேர் லைக் செய்ய,  இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் 'கமெண்ட்ஸ்'ஸில் விவாதிக்கின்றனர். சென்னையின் பகுதி  வாரியாக இவர் கொடுக்கும் மழைத் தகவல்கள் பெரும்பாலும் தவறுவதில்லை. 2015ஆம் ஆண்டு  வெள்ளத்தின் பொழுது, வானிலை நிலையத்தின் தகவல்களைக் காட்டிலும் இவர் கொடுத்த  தகவல்கள் துல்லியமாக  இருந்தன.  பின்னர் வர்தா புயலின் பொழுதும் இவர் கொடுத்த  'அலெர்ட்'கள் மக்களுக்கு உதவின. கடந்த வாரத்தில் 'தமிழ்நாடு வெதர்மேன்' (Tamil Nadu Weatherman) ஃபேஸ்புக் பக்கத்தை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை  மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது.    




   2014ல்...



2017ல்



  'தமிழ்நாடு வெதர்மேன்' பக்கத்தை நடத்தி வருபவர்  பிரதீப் ஜான்.  இவரின் கணிப்பின்படி  மழைபெய்வதால் இவர்  வானிலை ஆராய்ச்சியாளர் என்று  நினைத்திடவேண்டாம்.  அடிப்படையில் கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பின்னர் எம்.பி.ஏ  படித்து தனியார்  நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இப்பொழுது  தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி  சேவைகள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இயல்பிலேயே மழையை மிகவும் விரும்பும் இந்த மழை  மனிதர், தன் ஆர்வத்தால் பல்வேறு வலைத்தளங்களையும் வானிலை ஆராய்ச்சி  நிலையங்களின்  தகவல்களையும்   பார்த்து, புரிந்து பொழியப்போகும்  மழையின் அளவு, நேரம்  ஆகியவற்றைப் பற்றிய தகவலைகளைப் பகிர்கிறார், ஆர்வமும் உழைப்பும் இருந்தால், யாரும்  இதை ஒரு மாதத்தில் செய்யலாம் என்றும் கூறுகிறார் பிரதீப் ஜான். தனது ஃபேஸ்புக் பக்கத்தைப்  பின்தொடர்பவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள இவர், 2014 ஆம் ஆண்டு இந்தப்  பக்கத்தைத் தொடங்கியது பற்றிய நினைவையும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.         




2015 சென்னை வெள்ளம் 



தன் சிறுவயதிலிருந்து வானிலை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்ததனால், காலப்போக்கில் அதனைப்  பற்றிய தகவல்களை சேகரித்து தனது வலைப்பக்கத்தில் (blog)  கட்டுரைகளாக எழுதினார் . பின்னர்  வானிலை சம்பந்தமான கருத்துக்களை மக்களுக்கும்  தெரிவிக்கும் வகையில் 2014ல் ஃபேஸ்புக்கில்  "தமிழ்நாடு வெதர்மேன்" எனும் பக்கத்தை  தொடங்கினார் ஜான். ஆரம்ப காலங்களில் இந்த பக்கத்தை ஒரு நாளைக்கு ஒருவர் பார்ப்பதே  அரிதான ஒன்றாக இருந்தது. அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் தகவல்களை பதிவிட்டு  கொண்டிருந்தார்.   இவரை வெளியுலகத்திற்கு காட்டியது,  2015ல்   சென்னையை  உலுக்கிய மழை மற்றும் வெள்ளத்தை பற்றி துல்லியமாக கூறியது தான். அதன் பின்னர் இவரின்  முகபுத்தக பக்கத்தில் 60,000 லைக்குகளையும் நாள் ஒன்றுக்கு 3000 மெசேஜ்களையும்  பெற்றுள்ளார். அதன் பின் 2016ல் வந்த வர்தா  புயலின் போதும் இவரின் வானிலை தகவல்கள்  துல்லியமானதாக இருந்தது . இன்று பெய்யும் வடகிழக்கு பருவமழை பற்றிய தகவல்களை தன்  முகப்புத்தக பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இணையத் தமிழர்களின் மழை வழிகாட்டியாகத் தொடர்கிறார் இந்த மழை மனிதர். 

ஹரிஹரசுதன் 

சார்ந்த செய்திகள்