
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் கடந்த சில தினங்களாகவே பல இடங்களில் பகல் நேரங்களில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழையும் பொழிந்து வருகிறது.
அந்த வகையில் கோயம்புத்தூரில் இன்று காலை முதல் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மாலை திடீரென சூறைக் காற்று வீசத் தொடங்கியது. இதில் கோவை காந்திபுரம் பகுதியில் மாலை 4 மணியளவில் சூறைக்காற்று வீசியதில் சுமார் 4 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்தன. மரங்களும் சாலையிலேயே விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு மின்தடையும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மோசமான நிலையில் மின்கம்பம் இருந்தால் உடனடியாக மின்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மின் கம்பிகள் கீழே அறுந்து கிடந்தால் அவற்றை மிதிக்காமல் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.