Skip to main content

“உண்மைகளை சரிபார்க்கவும்..” - சீன ஊடகத்தை விளாசிய இந்தியா!

Published on 07/05/2025 | Edited on 07/05/2025

 

India slams Chinese media on operation sindoor

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாத கும்பல் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் ஓட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. தாக்குதல் நடத்திய பயங்கரவாத கும்பல் பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதால், பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தது. இருநாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த சூழலில், இன்று நள்ளிரவில் 1 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறித்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் உள்பட முப்படைகள் இணைந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி வருகிறது. மேலும், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த லஷ்கர் -இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் மாலிக் மற்றும் முடாசிர் ஆகியோர் இந்தியாவின் தாக்குதலில் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதே சமயம், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 2 குழந்தைகள், பெண்கள் உள்பட 10 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 38 காயமடைந்ததாகவும், பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா நடத்திய இந்த அதிரடி தாக்குதலுக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைக்காக ஆயுதப்படைகளுக்கு முழு அதிகாரத்தையும் பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், சீனாவில் உள்ள குளோபல் டைம்ஸ் என்ற ஊடகம், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து தவறான தகவல் பரப்பி வருவதாக இந்தியா குற்றம் சாட்டி கடுமையாக சாடியுள்ளது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் செயல்பட்டு வரும் குளோபல் டைம்ஸ் என்ற ஊடகம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, மூன்று இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக செய்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தியை மேற்கோள் காட்டிய சீனாவில் உள்ள இந்திய தூதரகம், ‘ஊடக நிறுவனங்கள் ஆதாரங்களைச் சரிபார்க்காமல் இது போன்ற தகவல்களை பகிரும்போது, அது பத்திரிகை பொறுப்பு மற்றும் நெறிமுறைகளில் உள்ள குறைகளை பிரதிபலிக்கிறது. உண்மைகளை சரிபார்த்து, அதன் ஆதாரங்களை விசாரணை செய்ய வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை. சமூக ஊடகங்களில் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் ஆதாரமற்ற கூற்றுகளை நிறுத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்