Skip to main content

ஆளில்லா சூப்பர் மார்க்கெட்

Published on 25/01/2018 | Edited on 25/01/2018
ஆளில்லா சூப்பர் மார்க்கெட்  



சூப்பர் மார்க்கெட் கடைக்குள் உங்களுக்கு தேவையான பொருட்கள் இருக்கிறது, உள்ளே நுழைந்து உங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு அப்படியே வெளியே வந்துவிடலாம். அதாவது வாங்கிய பொருட்களுக்கு கூட்டத்தில் வரிசையாக நின்று பில் போட்டு, காசு கொடுத்துவிட்டு, கடைசியில் வாங்கியதெல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்ப்பது என இத்தனை வேலைகளும் இனி இல்லாமல் போகப்போகிறது. அப்படி எந்தக் கடை இருக்கு. அண்ணாச்சி கடைவேனா கடன் சொல்லிட்டு வரலாம், சூப்பர் மார்க்கெட்டுல பில்லு போடுறதுக்கும், சரிபாக்குறதுக்கும் நிக்காம வரது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு ஆம், வருங்காலத்தில் அது சாத்தியமே என்று  பதில் சொல்லியிருக்கிறது "அமேசான் கோ". நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய ஒரு சூப்பர் மார்க்கெட்டை கடந்த திங்கள் அன்று வாஷிங்க்டனில் திறந்து சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது அமேசான்.  



மக்கள் கடைக்கு சென்று வாங்கிக்கொண்டிருந்த பொருட்களை வீட்டிலேயே இருந்தபடி, ஆன்லைன் மூலம் வாங்க வைத்தது அமேசான் நிறுவனம். இந்த கலியுக காலத்தில் மேலும் மனிதர்களை சோம்பேறி ஆக்கிய பெருமை இவர்களுக்கும் சேரும். புதிது புதிதாக தொழில்நுட்பங்களை சந்தையில் கொண்டுவந்து, பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள். அவ்வப்போது பங்குச் சந்தை மற்றும் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெறுவார்கள். இந்த நிறுவனம்தான் "அமேசான் கோ" என்ற பெயரில் மக்களுக்கு எளிமையாக இருக்கும் இந்த சூப்பர் மார்கெட்டை அறிமுகம் செய்திருக்கின்றனர்.



இந்த கடை பில்லிங், சேவை என எதற்கும் ஆட்கள் இல்லாமல் எவ்வாறு இயங்குகிறது என்பதை கவனிப்போம். இக்கடையில் நுழையும் முன்பே மொபைல் போனில் 'அமேசான் கோ' என்ற செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே இருக்கும் சென்சார் கேட்டைத் தாண்டி உள்ளே செல்ல முடியும் (மெட்ரோ டிரைனில் கார்டை வைத்து செல்வது போன்று மொபைலில் உள்ள ஆப்பை ஸ்கேன் செய்துவிட்டு செல்லவேண்டும்). அதன்பின் அங்கு இருக்கும் பொருட்களை எடுக்கும்போது சுற்றிலும் இருக்கும் கேமரா மற்றும் சென்சார் அது நீங்கள் வாங்கிவிட்டதாக பதிவேற்றிக்கொள்ளும். அந்தப்பொருளை திரும்பி இருந்த இடத்திலேயே வைத்துவிட்டால் அது கணக்கிலிருந்து நீக்கிவிடும். அத்தனை தொழில்நுட்பங்களுடன் இருக்கிறது அந்த மார்க்கெட். இங்கு தற்போது உணவகம், வைன், பீர் போன்ற பொருட்களும், குளிர்பான பொருட்களும் விற்கப்படுகிறது. எடுத்துக்கொண்ட பொருட்களை நாமே பையில் போட்டுகொண்டு வெளியே வந்துவிடலாம், நாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கென்று பில் எல்லாம் அமேசான் கோ ஆப்பில் ஏறிவிடும். அந்த தொகையை நாம் செயலியில் இருக்கும் கிரெடிட் கொண்டு அடைத்துக்கொள்ளலாம். "இந்த திட்டத்தை ஐந்து வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு, தற்போதுதான் சோதனை முயற்சியில் இறங்கியிருக்கிறோம். இந்த சோதனை வெற்றியடைந்தால் உலகம் முழுவதும் இந்த ஷாப்பிங் முறை சாதனை படைக்கும். மக்களுக்கு பயன்படுத்த எளிதான, மிகவும் பிடித்த ஷாப்பிங் மார்கெட்டாக இருக்கும் என்று சொல்கிறார்கள் அமேசான் நிறுவனத்தினர். இந்தக் கடையில் மனிதர்கள் யாரும் பில்லிங், செக்கிங் போன்ற விஷயங்களில் ஈடுபடுவதில்லை. அங்கு இருக்கும் உணவு பொருட்களை தயாரிக்கும் பணிகளில்தான் ஈடுபடுகின்றனர்.

-சந்தோஷ் குமார் 

சார்ந்த செய்திகள்