
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவைப் பதவியேற்றுக் கொண்டது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (27/06/2021) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திரா ப்ரியங்கா, பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகிய ஐந்து பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு எனக்கூறி துணைநிலை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தில் ஒன்றிய அரசு என்பது விவாதப் பொருளாகிய நிலையில் இந்திய ஒன்றியம் எனக் கூறி பதவியேற்பு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "புதுச்சேரியில் பதவியேற்றுள்ள புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் இணைந்து, உறுதியுடன் செயல்பட்டு, புதுச்சேரி மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.