
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தினகரனை விமர்சித்து பேசியுள்ளனர். இது தொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத்.
அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் தாம்பரத்தில் நடந்தது. அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குடும்பத்தின் இரும்பு பிடியில் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இணைந்து செயல்படுகிறோம். இந்த கட்சியை கபளீகரம் செய்ய தினகரன் நினைக்கிறார். அதிமுக தூய தொண்டர்கள் இருக்கும்வரை அது நடக்காது என்று கூறியிருக்கிறாரே?
அச்சத்தில் புலம்புகிறார் ஓ.பி.எஸ். இது அடிமையின் புலம்பல். கட்சியை கபளீகரம் செய்யப்போகிறார் என்று வரம் தந்தவன் தலையிலேயே கை வைக்க துடிக்கிற வன்மம் அந்த பேச்சில் வெளிப்படுகிறது. அதிகாரம் கண்ணை மறைக்கிற காரணத்தினால் ஆத்திரத்தில் இருந்து வருகிற வார்த்தைகள் இந்த வார்த்தைகள்.

இவர்கள் நீண்ட நாள் அந்த ஆசணத்தில் உட்காருவதற்கு காலம் அனுமதிக்காது. 234 தொகுதிகளிலும் ஆதரவு இருக்கிறது என்று சவடால் அடிக்கிற ஓ.பன்னீர்செல்வத்தை கேட்கிறேன். உங்களுடைய சொந்த ஊர் பெரியகுளத்தில் ஒரு வட்டத்தில் நின்றுகூட உங்களால் வெற்றிப்பெற முடியாது. அது உங்களுக்கே தெரியும்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் மோடியின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக எடப்பாடியை ஏற்றுக்கொண்டார். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எண்ணெய்யும் தண்ணீருமாகத்தான் இருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரியும்.
தன்னுடைய பெயர் உள்ள கல்வெட்டே மதுரையில் உடைத்து நொறுக்கப்பட்ட பிறகும், ஒன்றாகத்தான் இருக்கிறோம். நன்றாகத்தான் இருக்கிறோம் என்று திருப்பித் திருப்பி சொல்வதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே கட்சியின் தொண்டர்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போன இந்த புதிய அடிமைகள் இனிமேல் எத்தனை புலம்பல்கள் புலம்பினாலும் தமிழகம் இவர்களை சரியாக புரிந்தும் வைத்திருக்கிறது. தெரிந்தும் வைத்திருக்கிறது.
பொன்னேரியில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 10 ஆண்டுகளாக எங்கு இருந்தார் என்று தெரியாத தினகரன், பின் வழியாக வந்து எம்எல்ஏவான பிறகு ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார். ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என பேசியிருக்கிறாரே?
ஒரு தினகரனையே சமாளிக்க முடியாமல் தினறுகிறார்கள். கட்சியினுடைய அவைத்தலைவரே அடிப்பட்டு கீழே விழுகிறார். மிக நீண்ட இளைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி கேவலமாக தோற்றிருக்கிறது. ரூபாய் 6 ஆயிரம் கொடுத்தும் இந்த அவல நிலை என்பது எடப்பாடியினுடைய மனசாட்சிக்கு தெரியும். ஒரு தினகரன் என்ன, ஆயிரம் தினகரன் வந்தாலும் சமாளிப்போம் என்று சொல்லுகிற எடப்பாடி பழனிசாமி, முதலில் ஒரு தினகரனை சமாளிப்பதற்கு தைரியும் இருக்கிறதா என்பதை அவர் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில், அன்னைத் தமிழுக்காக அக்னிப் பரோதங்களை அணைத்துக்கொண்டு ஆவித் துறந்தவர்களின் செயற்கரிய தியாகத்தைப்பற்றி பேசாமல் மிக மலிவான அரசியல் பேசுகிற மாண்புமிகு முதலமைச்சரின் அரசியல் தரத்தை பார்த்து நாடே காரித் துப்புகிறது.

சின்னசாமி தீக்குளித்த நாள் ஜனவரி 25. அதனைத் தொடர்ந்து விருகம்பாக்கம் அரங்கநாதன், விராலிமலை சண்முகம், கோடம்பாக்கம் சிவலிங்கம், பீளமேடு தண்டபாணி, கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, நஞ்சு அருந்தி செத்த மாயவரம் சாரங்கபாணி, மாணவனாக இருந்து துப்பாக்கி குண்டுக்கு மார்பு காட்டி செத்துப்போன சிவகங்கை ராஜேந்திரன் என்று செந்தமிழ் காக்க போராடியவர்களை பற்றி கொஞ்சம்கூட பேசாமல் மிக மலிவான அரசியலுக்கு மொழிப்போர் தியாகிகளின் மேடையை பயன்படுத்திய இவர்கள் எந்த பிறவியிலும் ஈடேற முடியாது என்பதை எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன்.
கட்சியினுடைய அவைத் தலைவரையே களத்தில் நிறுத்தி, அவைத் தலைவரே கேவலமாக தோற்றுப்போனதற்குப் பிறகும், வாய்ச் சவடால் விடுகிற இந்த வஞ்சனார்களுக்கு வருங்கால தமிழகத்தில் நாற்காலியும் கிடைக்காது, இவர்கள் மாமியார் வீட்டுக்கு போகிற நாள் வெகுதொலைவில் இல்லை. ஒரு முதலமைச்சர் எந்த இலாகாவை வைத்துக்கொண்டு நிர்வாகத்தை ஒழுங்காக செய்ய வேண்டும் என்று தெரியாமல், கப்பம் வாங்குவதற்காகவே இருக்கிற முதலமைச்சரின் இந்த பேத்தல்களை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
-வே.ராஜவேல்