Skip to main content

சென்னையை சுத்தம்செய்ய கிளம்பிய மாணவிகள்!

Published on 16/10/2017 | Edited on 16/10/2017
சென்னையை சுத்தம்செய்ய கிளம்பிய மாணவிகள்! 

‘தூய்மையாக இருப்பது சுதந்திரத்தைவிடவும் மேலானது!’- சுத்தமான இந்தியாவை உருவாக்குவது குறித்து தேசத்தந்தை காந்தி கூறியதன் சாராம்சம் இது. பொதுவாக தூய்மையை விரும்பும் யாவரும், அதற்காக துணிந்து களமிறங்குவதில்லை. அந்தவகையில், வெறும் விளம்பரங்களாக நில்லாமல், சென்னையைச் சேர்ந்த மாணவிகள் தூய்மைப் பணிகளில் இறங்கியிருப்பது அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



சென்னையின் குரோம்பேட்டை பேருந்துநிலையம் மிகமுக்கியமான, கூட்டநெரிசல் மிக்க பேருந்துநிலையங்களில் ஒன்று. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணநிமித்தமாக வந்துசெல்கின்றனர். அமைப்புசார் மற்றும் சாரா நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து ஏராளமான போஸ்டர்களும், பேனர்களும் தவறாமல் இதே பேருந்துநிலையத்தில்தான் இடம்பெறுகின்றன.  

இந்நிலையில், இன்று காலை எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரியின் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 25 பெண்கள், பேருந்துநிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து இதில் ஈடுபட்ட தேசிய மாணவர் படையைச் சேர்ந்த அபர்ணா நம்மிடம், “குரோம்பேட்டை பேருந்துநிலையத்தில் இன்று போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டோம். தென் சென்னையில் இது மிகமுக்கியமான பேருந்துநிலையம். இங்கு பல போஸ்டர்கள் சிறுகுழந்தைகள் உட்பட, குறிப்பிட்ட வயதினருக்கு சம்மந்தமில்லாத மாதிரியான தகவல்களைத் தருவதாக இருந்தன. அதுபோல இன்னும் பலவிதமான போஸ்டர்கள் யாருக்கும் பயன்படாதவகையில் அங்கு ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை அகற்றவேண்டும் என்ற நோக்கில், எங்கள் கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவிகள் 25 பேர் இதில் கலந்துகொண்டோம். எங்களது இந்த முயற்சியின்போது மற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இதுகுறித்த தகவல்களைக் கேட்டறிந்தனர். அவர்களும் இதுமாதிரியான முன்னெடுப்புகளில் கலந்துகொள்ளவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இதேபோல், பல நிகழ்ச்சிகளை நாங்கள் முன்னெடுத்து நடத்தியிருக்கிறோம். இதற்குமுன்னர், பிராட்வே பேருந்துநிலையத்தில் இதேபோன்ற நிகழ்ச்சியை நடத்தினோம். அங்கு குப்பைத்தொட்டிகள் இல்லாதநிலையில், நாங்களே குப்பைத்தொட்டிகள் வாங்கி அகற்றப்பட்ட குப்பைகளை அவற்றில் சேகரித்தோம். எங்களைப் பார்த்த பொதுமக்களும் குப்பைத்தொட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அது நல்ல ஆதரவைப் பெற்ற முயற்சி. இன்றும் பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்தனர். மேலும், போஸ்டர்களை அகற்றியபின்னர், அந்த சுவர்களில் விளம்பரம் செய்யாதீர், புகை பிடிக்காதீர் போன்ற பொதுவான விழிப்புணர்வு வாசகங்களையும் பதிவுசெய்திருக்கிறோம். இனிமேலும், இதுபோல் இங்கு போஸ்டர்கள் ஒட்டமாட்டார்கள் என நம்புகிறோம்" என்றார் உறுதியாக.



நாம் கொட்டும் குப்பைகள் எங்கு போகின்றன? யார் அதை சுத்தம் செய்கிறார்கள்? எங்கு குவிகின்றன அந்தக் குப்பைகள்? போன்ற கேள்விகள் ஒவ்வொருவருக்குள்ளும் எழவேண்டும். சுத்தமான, சுகாதாரமான புவியை கட்டமைக்க ஒவ்வொருவரும் தார்மீக எண்ணத்தோடு முன்வரவேண்டும். நாம் வளப்படுத்துவதற்காக இந்த பூமி காத்துக்கிடக்கிறது என அழைக்கும் இந்த மாணவிகளின் எண்ணம் பாராட்டிற்குரியது. 

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்