
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜியும், பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமயம் குறித்தும் பேசி சர்ச்சையில் சிக்கிய பொன்முடியும் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறையை, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
அதே சமயம் பொன்முடி வகித்து வந்த வகித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறையை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதோடு மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அமைச்சரவை மீண்டும் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை எஸ். ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இயற்கை வளத்துறையையும் (Natural Resources) கூடுதலாகக் கவனிப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.