
தமிழகத்தில் 2024 - 25ஆம் கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 03ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தன. இத்தகைய சூழலில் இந்த பொதுத் தேர்வை எழுதிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (08.05.2025) வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 09.00 மணிக்கு வெளியிட்டார். அதே சமயம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.resultsdigilocker.gov.in என்ற இணையதள முகவரி மூலம் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.
அதோடு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவர்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி இந்த ஆண்டின் தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆகும். அதிலும் குறிப்பாக மாணவிகள் 96.70 % தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16% தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த பொதுத் தேர்வில் வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக 3.54% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.82% உடன் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் 97.98% உடன் இரண்டாம் இடமும், திருப்பூர் மாவட்டம் 97.53% உடன் மூன்றாம் இடமும், கோயம்புத்தூர் மாவட்டம் 97.48% உடன் நான்காம் இடமும், கன்னியாகுமரி மாவட்டம் 97.01% உடன் 5ஆம் இடமும் பிடித்துள்ளது. அதே சமயம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தில் 135 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பொதுத் தேர்வு எழுதிய 8 ஆயிரத்து 19 மாற்றுத்திறனாளி மாணவர்கள் 7 ஆயிரத்து 466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.10% ஆகும். இந்த பொதுத் தேர்வில் அதிகபட்சமாகக் கணினி அறிவியலில் 9 ஆயிரத்து 536 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.