
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அருண்குமார் - மாதவி தம்பதியினர். இந்த தம்பதிக்கு அரூஷி(5) உள்பட இரண்டு மகன் உள்ளனர். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அருண்குமார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அதன்பிறகு இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்த மாதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரிஷி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது. அதன் காரணமாக இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். ஆனால், மகன் ஆரூஷி தாய் மாதவியுடன் எப்போதும் இருப்பதால், ரிஷியும் - மாதவியும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொள்வது கடினமாக இருந்துள்ளது. அந்த கோவத்தில் ஆண் நண்பர் ரிஷியுடன் சேர்ந்த மாதவி, மகன் ஆரூஷியை அடிக்கடி தாக்கி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மகன் ஆரூஷியை ஆண் நண்பர் ரிஷியுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இருவரும் தாக்கியதில் ஆரூஷி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் அங்கிருந்து தப்பித்து இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதனிடையே தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவன் ஆரூஷியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.