
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையெ உலுக்கியது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத கும்பல் இந்த தாக்குதலை நடத்தியிருந்ததால், பாகிஸ்தானுக்கு எதிராக சிந்துநதி நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வந்தது. இந்தியாவின் நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியாவுடனான சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்தது.
இதனை தொடர்ந்து, நேற்று (07-05-25) நள்ளிரவு 1 மணியளவில், பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்கு செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதே சமயம், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையில், காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில், 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுகும் விதமாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானை ஒட்டிய மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இந்திய ராணுவம் அப்பகுதிகளில் ட்ரோன் தடுப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைத்துள்ளது. மத்திய உள்துறை அமித்ஷா தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் அத்துமீறி நுழைபவர்கள் யாரைவது கண்டால் கண்டதும் சுட எல்லை பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் சீல் வைக்கப்பட்ட நிலையில், அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றி வருகின்றனர். பாகிஸ்தான் எந்த நேரத்திலும் பதில் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.