Skip to main content

சின்ன இதயத்திற்கு சின்னச்சின்ன 'டிப்ஸ்'...

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
'சின்ன இதயத்திற்கு சின்னச்சின்ன 'டிப்ஸ்'...

செப்டம்பர் 29 - உலக இதய தினம்  





நாம் சுறுசுறுப்பானவரோ இல்லை, சோம்பேறியானவரோ, நமது   உடலில் நமக்காக  அயராது செயல்பட்டுக்  கொண்டிருப்பது நமது  இதயமாகும். அதன் 'லப்டப்' சத்தம்  நின்றுவிட்டால்  நாம் 'கப்-ச்சுப்' ஆகி  சொல்லவேண்டியது தான். யாரிடம் கொடுத்து வைத்திருந்தாலும், நம் இதயத்தை நாம் தான் பாதுகாக்க முடியும். 

இதய  நோய்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தவும்  பாதிக்கபட்டோரை  மீட்கும்  நோக்கிலும் வருடந்தோரும் செப்டம்பர் 29ஆம் தேதி, “உலக இதய தினம்”  கொண்டாடப்படுகிறது. 'உலக இதயக் கூட்டமைப்பு' (WHF) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள  ஒரு அரசு சாரா அமைப்பாகும். இதன் நோக்கம் இதயம் சார்ந்த  நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இவர்களின் உறுப்பினர்கள்  நூறுக்கும் மேற்பட்ட  நாடுகளில் உள்ளனர். ஆசியா-பசுபிக், அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இதய நோயினால்  இப்பவர்களில்  எம்பது சதவிகிதம்  மக்கள்  வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று இவர்கள்  கூறுகின்றனர். பெரும்பான்மையான  வளரும் நாடுகளால் இதய நோய்களுக்கான சிகிச்சையைத் தங்களின் மக்களுக்கு முழுமையாக அளிக்கமுடியவில்லை என்பதே உண்மை.     

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி இதய நோய்களால் ஆண்டுதோறும் 25 இலட்சம் மக்கள் மரணம் அடைகின்றனர். 2030-ல் இதுவே 2.3 கோடியை எட்டக் கூடும். இந்தியாவில், பரவா நோய்களால் மரணம் அடைவோரில் 26 % பேர் இதய நோய்களால் உயிரிழக்கின்றனர். நமது சின்ன இதயத்தைக் காக்க நாம் செய்ய வேண்டிய சின்னச் சின்ன செயல்களைப் பார்ப்போம்... 





'படி'ப்படியாக ஏறுவோம்...

இன்று,   நமது அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அலுவலகங்களிலும் கடைகளிலும் மால்களிலும் என எங்கும் 'லிஃப்ட்'தான். ஒரு தளம், இரண்டு தளம் ஏற படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம்..

புகை - பகை 

புகைப்பழக்கம் மட்டுமல்ல, நம்மருகே நின்று புகை பிடிப்பவரும் நமக்குப் பகை தான். அவரது பழக்கத்தால் நமது வாழ்நாள் குறைகிறது, நமது இதயம் பாதிக்கப்படுகிறதென்றால், பகை தானே...




ஷவார்மா, சரியாமா?

இறைச்சி உணவுகளில் முட்டை, மீன், தோலுரித்த கோழி ஆகியவை ஆரோக்கியமென பரிந்துரைக்கப்படுகின்றனன. இன்று, 'பார்-பீ-க்யூ', ஷவார்மா தான் எங்கும் பிரபலமாக இருக்கின்றன. பிராய்லர் கோழிகள் என்றாலே ஆரோக்கியத்துக்கு பங்கம் தான் என்றாலும்,  ஒப்பீட்டளவில் 'க்ரில் சிக்கன்' பரவாயில்லை என்கிறார்கள் உணவியலாளர்கள்.           

பச்சையாய்ப்  போவோம்...

'கோ க்ரீன்' என்று ஊரெல்லாம் பெயிண்ட் மட்டும் அடிக்கிறார்கள். அது ஊருக்கு நல்லதோ இல்லையோ, 'க்ரீன்' உணவு இதயத்துக்கு நல்லதாம். நல்ல  பழங்கள், பச்சை காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.          


      

உடலை அழுத்துவோம்...மனதை விடுவிப்போம் 

கணினி,  கைபேசி, வாட்ஸ்-அப், மின்னஞ்சல் என நம் வேலை எப்பொழுதும் நம்முடன் இருந்து நம்மை அழுத்திக்கொண்டே இருக்கும் காலகட்டத்தில், உடற்பயிற்சியும், தியானமும், 'கட்டாயமில்லா' , 'காடுகளை அழிக்கா'  யோகாசனமும் மனஅழுத்தத்தை குறைத்து இதயத்தைக் காக்க உதவுகின்றன.       




'ஆப்'புகளை அளவாய் பயன்படுத்துவோம் 

'டாக்சி'யிலிருந்து 'காபி'வரை 'ஆப்'பிலேயே வரவழைக்கும் காலமாகிவிட்டது. வீட்டிலிருந்தபடியே எல்லாம் நடத்தப்படுகிறது. நேரம் முக்கியம் தான், அந்த நேரத்தைப் பயன்படுத்த ஆரோக்கியம் முக்கியம்.  தேவையின் போது மட்டும் அவற்றை  பயன்படுத்திவிட்டு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்வது மிக அவசர தேவை.   

காதலுக்கு இதயம் தேவையோ இல்லையோ வாழ்வதற்கு இதயம் தேவை. 'லப்-டப்' ஒலியை எப்பொழுதும் சீராக சிறப்பாகக் கேட்போம்.

ஹரிஹரசுதன்      

சார்ந்த செய்திகள்