Continued robbery of Tasmac employees

Advertisment

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பச்சமுத்து மற்றும்அவருடைய நண்பர் சரவணன். இவர் பரவாய் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். அதே கடையில் சரவணனுக்கு உதவியாளராக பச்சமுத்துவும் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் டாஸ்மாக் கடையில் காலை முதல் மாலை 6 மணி வரை மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது அதன்மூலம் வசூலான தொகை 3 லட்சத்து 42 ஆயிரம் பணத்தை சரவணன் எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் இரவு கடையை மூடும் வரை விற்பனையான தொகை 72 ஆயிரத்தை அந்த கடையில் விற்பனையாளராக வேலை செய்த ஆறுமுகம் பச்சமுத்துவிடம் கொடுத்து அதை சரவணனிடம் கொண்டு போய் கொடுத்து விடுமாறு ஆறுமுகம் கூறியுள்ளார்.

அந்த 72 ஆயிரம் பணத்துடன் பச்சமுத்து மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு பைக்கில் ஏரி தனது ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்படி செல்லும்போது கோழிப்பண்ணை அருகே இரண்டு பைக்குகளில் 4 மர்ம நபர்கள் பச்சமுத்துவின் மோட்டார் பைக்கை பின் தொடர்ந்து வந்துள்ளனர். பச்சமுத்துவின் பைக்கை உரசுவது போல் வந்த அந்த மர்ம நபர்கள் திடீரென்று அவரது முகத்தில் மிளகாய் பொடியை வீசி உள்ளனர். அவர் நிலை தடுமாறி கீழே விழும்போது அவரை அரிவாளால் வெட்ட போவதாக மிரட்டி உள்ளனர். இதனால் உயிருக்கு பயந்த பச்சைமுத்து மோட்டார் பைக்கை போட்டுவிட்டு காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டார்.

Advertisment

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் நாலு பேரும் பச்சமுத்து மோட்டார் பைக் பெட்டியில் வைத்திருந்த 72 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுதொடர்பாக குன்னம் போலீசில் பச்சமுத்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் டாஸ்மாக் கடையில் வசூலாகும் பணத்தை எடுத்துக்கொண்டு அதன் ஊழியர்கள் செல்லும்போது அவர்களை வழிமறித்து தாக்கி அந்த பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் தங்கள் தொடர் கைவரிசையைகாட்டி வருகிறது.

சமீபத்தில் சின்னசேலத்திலும் வேப்பூர் அருகே உள்ள ஆசனூரிலும் இதேபோன்று டாஸ்மாக் ஊழியர்கள் முகத்தில் மிளகாய் பொடி தூவி அவர்களை நிலை தடுமார வைத்து அவர்கள் எடுத்து சென்ற பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது, இப்பொழுது குன்னம் அருகே அதேபோல் இந்த டாஸ்மாக் கடை ஊழியரிடம் பணத்தைகொள்ளையடித்துள்ளனர். டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் பணத்தை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல முடியாத நிலையில் ஊழியர்கள் உள்ளனர். அப்படி எடுத்து செல்லும்போது கொள்ளையர்களால் அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு ஒரு நிரந்தர முடிவு காண வேண்டும் என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்களின்மேற்பார்வையாளர்கள்.