Skip to main content

பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?

Published on 22/01/2018 | Edited on 22/01/2018
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ் காரத்தின் தீர்மானம்?! 
இன்னொரு இமாலயத் தவறு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநிலக் கட்சி என்றே பொதுவாக கேலி செய்வது வழக்கமாகிவிட்டது. அதாவது, மேற்கு வங்க மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையை தோற்கடிப்பதில் கேரளா மாநிலக் கட்சிக் கிளை சந்தோஷப் பட்டுக்கொள்ளும்.

அதாவது மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துவிட்டு, இந்தியாவிலேயே தங்கள் மாநிலத்தில்தான் கட்சி வலுவாக இருக்கிறது என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுவதுபோலவே இந்த நடவடிக்கை இருக்கிறது.

ஆனால், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து 27 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததுபோல கேரளாவில் ஆட்சிப் பொறுப்பை தக்கவைத்த வரலாறு இல்லை என்பது மிகவும் முக்கியமானது.

பிரகாஷ் காரத் ஏன் பாஜகவுடனும் காங்கிரஸுடனும் சமதூரத்தில் நிற்கவேண்டும் என்கிறார்? இது ஒருவகையில் பாஜக ஆதரவு நிலைப்பாடுதான் என்று அந்தக் கட்சியிலேயே ஒரு பகுதியினர் குமுறுகிறார்கள்.



1996ல் தொடங்கியது பிரகாஷ் காரத்தின் உள்ளறுப்பு வேலை என்று கணக்கிடுகிறார்கள். ஆம். அப்போதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கைக்கருகில் எட்டி வந்தது. இந்திய அரசியலை மாற்றிப் போட்டிருக்கக்கூடிய அந்த வாய்ப்பை அப்போதும் பிரகாஷ் காரத் தட்டிவிட்டார்.

1996ல் முதல் முறையாக பாஜக தனிப்பெருங்கட்சியாக வந்தது. ஆனால், அந்த கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை. திமுக, தமாகா, இடதுசாரிகள், மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த ஐக்கியமுன்னணி அரசு அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

பிரதமராக முதல் வாய்ப்பை ஜோதிபாசுவுக்கு வழங்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியா. அப்போது மக்களவையில் அந்தக் கட்சிக்கு 42 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதுமட்டும் காரணமில்லை. மேற்கு வங்கத்தில் 25 ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணி அரசை நடத்தி அனுபவப்பட்ட ஜோதிபாசு மத்தியிலும் கூட்டணி அரசை நடத்துவார் என்று சோனியா நம்பினார்.

சோனியாவின் தேர்வை ஜோதிபாசுவும், அன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுர்ஜித்தும் வரவேற்றார்கள். ஆனால், கட்சியின் செயல்திட்டத்தை காட்டி பிரகாஷ் காரத் இதை எதிர்த்தார். அவருடைய கருத்துக்கு மத்தியக் குழுவில் பெரும்பான்மை இருந்தாலும் பிரதமர் வாய்ப்பை மறுத்தது இமாலயத் தவறு என்று ஜோதிபாசு கருத்துத் தெரிவித்தார். பெரும்பான் கட்சித் தொண்டர்களின் கருத்தும் அதுவாகவே இருந்தது. என்றாலும் கட்சியின் முடிவை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அனைவரும் இருந்தனர்.

ஆனால், அன்றைய சூழ்நிலையில் தனிப்பெருங்கட்சியாக வந்த பாஜக தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்த நிலையிலும் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது. வாஜ்பாய் தலைமையில் பாஜக அமைச்சரவை அமைந்தது. 17 நாட்கள் மட்டுமே நீடித்த அந்த அமைச்சரவை ராஜினாமா செய்தது.

இருந்தாலும், பாஜக என்ற கட்சி இந்தியா முழுவதும் தனது பலத்தை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. இத்தனைக்கும் அந்தக் கட்சி ஒரு மாநிலத்தில்கூட ஆட்சிப் பொறுப்பில் இல்லை. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அந்தப் பெருமை தமிழகத்தைப் போலவே பெரும்பான்மையான மாநில மக்களுக்கு தெரியாது. ஜோதிபாசுவுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் சில மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தி இருந்தால் கட்சி மக்கள் மத்தியில் அறிமுகம் ஆக உதவியிருக்கும்.

ஒருவேளை சாமான்ய மக்களுக்கான திட்டத்தை கொண்டுவரும் முயற்சியில் ஜோதிபாசுவின் அரசு கவிழ்க்கப்பட்டிருந்தால்கூட அதுவும் மக்கள் மத்தியில் தெரிய வந்திருக்கும். அந்த வாய்ப்பை தவறவிட பிரகாஷ் காரத்தே காரணமாக இருந்தார்.

அதேசமயம், அன்றைக்கு பிரதமராக பொறுப்பேற்று ராஜினாமா செய்த வாஜ்பாய், அடுத்து வந்த தேர்தலில் 1998ல் கூட்டணி அரசு அமைக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்தார். பின்னர் காங்கிரஸுக்கு போட்டியாக தேசிய அளவில் வளர்ச்சி அடையவும் அந்த முதல் பதவியேற்பே காரணமாக அமைந்தது.

இப்போது மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க அந்த முதல் பதவியேற்பே காரணம் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது.

2004ல் பாஜக தலைமையிலான மத்திய அரசை தோற்கடிக்க அன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுர்ஜித் காங்கிரஸுடனும் உடன்பாடு வைக்கும் நிலைக்கு சென்றார். அந்த முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தது. அந்த அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த அழுத்தங்களால் மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்தன. ஆனால், மக்களுக்கு எந்தவிதத்திலும் அறிமுகமில்லாத அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை விலக்க பிரகாஷ் காரத் காரணமாக அமைந்தார்.


அப்போதும், கட்சியின் முடிவு தவறு என்று கட்சியினரில் பெரும்பகுதியினர் வருத்தப்பட்டனர். ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றதால் ஒரு நன்மையும் விளையவில்லை என்பது மிகவும் முக்கியம். ஆனால், மேற்கு வங்கச்  சட்டமன்றத் தேர்தலில் மம்தா கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க காரணமாக அமைந்துவிட்டது. அதையடுத்து அங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றது என்பதும் வரலாறு ஆகியது.

மேற்கு வங்க மாநிலத்தை இனி திரும்பப் பெற முடியாது என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அங்கு மம்தாவுக்கு போட்டியாக பாஜக உருவாகி வருவதாக ஒரு பிம்பம் வடிவமைக்கப்படுகிறது. அங்கு மதவெறி ஆதரவுக்கூட்டம் பெருகும் அபாயம் அதிகரிக்கிறது.

இந்த நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவையும் காங்கிரஸையும் ஒரே அளவுகோல் கொண்டு மதிப்பிடக் கூடாது என்ற கருத்து கட்சிக்குள் உருவாகி வருகிறது. அதுபோல தேவைப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சியின் முடிவுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற குரல் வலுப்பெறுகிறது.

ஆனால், பாஜகவின் மதவெறி செயல்திட்டம் கடுமையாகி வரும் நிலையிலும் காங்கிரஸுடன் எந்த உறவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிரகாஷ் காரத் குழு வரட்டுவாதமாக பேசிக் கொண்டிருப்பதாக கட்சிக்குள் ஒரு பிரிவினர் வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்தனர்.

யெச்சூரியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலத்தை மேலும் ஒருமுறை நீடிக்கலாம் என்றும், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து அவரை மீண்டும் தேர்வு செய்யலாம் என்றும் அந்த மாநிலக்குழுவே தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தையும் கேரளா உறுப்பினர்களின் ஆதரவோடு பிரகாஷ் காரத் தோற்கடித்துவிட்டார்.

இப்போது, காங்கிரஸுடன் எந்த வகையிலும் உறவு தேவையில்லை என்று பிரகாஷ் காரத் கொண்டு வந்த தீர்மானமும் மத்தியக்குழுவில் நிறைவேறியிருக்கிறது. மொத்தம் உள்ள 55 மத்தியக்குழு உறுப்பினர்களில் 31 பேர் பிரகாஷ் காரத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 27 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

காங்கிரஸுடன் தேர்தலில் புரிந்துணர்வு உடன்பாடோ, கூட்டணியோ வைத்துகொள்ளக் கூடாது என்று பிரகாஷ் காரத்தின் தீர்மானம் கூறுகிறது.

யெச்சூரி கொண்டுவந்த தீர்மானத்தில், பாஜகவை தோற்கடிப்பதற்காக ஆளும் வர்க்கக் கட்சிகளோடு எந்த உடன்பாடோ, கூட்டணியோ அமைக்கக்கூடாது என்று மட்டும் இருந்தது. அதாவது காங்கிரஸின் பெயர் இல்லை.

பிரகாஷ் காரத்தின் தீர்மானம் இனி இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு, கட்சிக்குள் விவாதத்திற்காக அனுப்பப்படும். இதில் பொதுமக்களும் தங்கள் திருத்தத்தை குறிப்பிட முடியும். பின்னர் இந்த தீர்மானம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும். அங்கு என்ன முடிவெடுக்கப்படுகிறதோ அதுவே இறுதி முடிவாக இருக்கும்.

பிரகாஷ் காரத் கொண்டுவந்த தீர்மானத்தில், பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் அல்லாத மதசார்பற்ற கட்சிகளோடு உடன்பாடு எட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லாத நிலையை அவர் ஏன் உணரவில்லை என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையில் இரண்டு அணிகளாக மதசார்பற்ற கட்சிகள் இணைந்துள்ளன. அல்லது இணைய விரும்புகின்றன என்பதுதான் எதார்த்தம். மத்தியில் கூட்டணி அரசில் இடம்பெற்று பழகிவிட்ட மாநிலக் கட்சிகளும், மதசார்பற்ற கட்சிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இணைய வாய்ப்பே இல்லை எனும்போது, பிரகாஷ் காரத்தின் தீர்மானம் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்கவே உதவும். அவருடைய தீர்மானம் பாஜகவுக்கு ஆதரவான தீர்மானமே ஆகும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்