Skip to main content

நவம்பர் 8 வளர்ச்சியா? வீழ்ச்சியா?

Published on 08/11/2017 | Edited on 08/11/2017


சுதந்திர தினம் ஆகஸ்ட் 15. குடியரசு தினம் ஜனவரி 26. எல்லாக் கட்சியினரும் இந்த தேதிகளை ஏற்றுக்கொள்கிறார்கள். நவம்பர் 8?

ஓராண்டுக்கு முன் இதேநாளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்ததன் மூலம், பணவர்த்தகம் வெளிப்படைத்தன்மையை எட்டியுள்ளது. அதனால் நவம்பர் 8 கருப்புப் பண எதிர்ப்பு தினம் என்கிறது இந்தியாவை ஆளும் கட்சி. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் கப்பார்சிங் (கொடூரமான) வரிக்கொடுமைக்கு இந்தியர்கள் ஆளாகியிருக்கிறார்கள். ஓராண்டாக பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயமும் தொழில்களும் இன்னும் மீளவில்லை. அதனால் நவம்பர் 8 நாட்டின் கறுப்பு தினமே என்கிற குரல் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியிடமிருந்தும் மற்ற எதிர்க்கட்சிகளிடமிருந்தும் வெளிப்படுகின்றன.

பிரதமரும் நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் இந்த விமர்சனங்களைப் புறந்தள்ளுகின்றனர். உலக வங்கியால் இந்தியாவின் பொருளாதார நிலை பாராட்டப்பட்டுள்ளது. உலகில் தொழில் தொடங்க ஏற்ற நாடுகளில் இந்தியாவின் நிலை முன்னேறியுள்ளது. வங்கிகள் செயல்பாட்டிலும் இந்தியா இப்போது உயர்ந்துள்ளது. இந்த சர்வதேச மதிப்பீடுகளை மறைத்து அரசியல் செய்கின்றன எதிர்க்கட்சிகள் எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.

பண மதிப்பிழப்பின் ஓராண்டு நிறைவு + ஜி.எஸ்.டி. 100 நாள் நிறைவில் உண்மை நிலவரம் என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரா.சிந்தனிடம் கேட்டோம். ""பண மதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிடாமல் அறிவிக்கப்பட்டது. மக்கள் அதிர்ச்சியாகத்தான் அதை எதிர்கொண்டார்கள். தனது உழைப்பில் சேர்த்த பணத்தை வங்கியிலிருந்து எடுப்பதற்காகவும், கையிலிருந்த 500, 1000 ரூபாய் தாள்களை உடனடியாக வங்கியில் போடவும் ஏ.டி.எம். முன்பாகவும் வங்கியிலும் நாள்கணக்கில் வரிசையில் காத்திருந்தவர்களில் 100-க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்தனர். ஒரு சர்வாதிகார உத்தரவினால், உயிரைக் கொடுத்த அப்பாவி மக்களின் மரணங்கள் கூட ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. பண மதிப்பிழப்பை அறிவித்தவர்களோ முன்தயாரிப்புகள் செய்துகொண்டார்கள். இந்தியாவில் 20 கோடி மக்கள் சில்லறை வணிகத்தை நம்பித்தான் இருக்கிறார்கள். விவசாயமோ, உள்ளூர் மார்க்கெட்டை பெரிய அளவில் நம்பியிருக்கிறது. உள்ளூர் சந்தையையும் முடக்கிப் போட்டுவிட்டார்கள். பணச்சுழற்சியை முடக்கியதால் பல தொழில்களில் பாக்கிகள் அதிகரித்து கடன் அதிகரித்திருக்கிறது. சில்லறை வணிகம், சிறு-குறு தொழில்கள், விவசாயம் ஆகிய மூன்று துறைகளுக்கு விழுந்திருக்கும் அடிதான் ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வீழ்ச்சியாக வெளிப்பட்டிருக்கிறது.

ஒருவருடம் கழித்து திரும்பிப் பார்க்கும்போது மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்றவர்களின் திட்டம், கருப்புப் பணத்தை உற்பத்தி செய்திருக்கிறது. வங்கியில் பணம் கொடுத்து மாற்ற முன்னுரிமை யாருக்கு கிடைத்தது? அதில் எவ்வளவு கமிஷன் போனது, அந்த கமிஷன் பணம் எவ்வளவு? ரிசர்வ் வங்கி எந்தெந்த வங்கிக்கு எவ்வளவு பணம் கொடுத்ததென்கிற விவரம் இல்லையென்று சொல்கிறார்கள். அதேபோல தனியார் வங்கிகள் முறைகேடு செய்திருப்பதாக வழக்குப் போட்டிருக்கிறார்கள். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கட்டமைப்பு இந்தியாவில் முழுமையாக இல்லை. இதனால் சாமானிய மக்களுக்குத்தான் பாதிப்பு.

குறிப்பாக கிராமப்புறங்களில் போதுமான வங்கியும், இணையதள வசதியும் கிடையாது. ஸ்வைப் எந்திரங்கள் கிடையாது. இன்னொரு பக்கம் வங்கியில் குறைந்தபட்ச பணஇருப்பு வைத்திருக்க வேண்டும் என எளிய மக்களைக் கட்டாயப்படுத்துவதும் இணையதளத்தில் பரிவர்த்தனை செய்யும்போது கமிஷன் எடுப்பதும் நிறைய இக்கட்டுகளை உருவாக்கியது'' என்கிறார் பொருளாதாரப் பார்வையுடன்.

கடந்த மூன்று மாதத்தில் ஏறத்தாழ 15 ரூபாய் அளவுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை உயர்ந்துள்ளது. டீசல் விலையிலும் ஏற்றம். பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏறினால் சரக்குப் போக்குவரத்துக்கான செலவு உயர்ந்து, மக்களைச் சென்றடையும் அத்தனை பொருட்களின் விலையும் உயர்ந்துவிடும் என்பது அடிப்படைப் பொருளாதாரம். இதுகுறித்த குமுறல்கள் பலதரப்பிலும் உள்ளதை நமது நேரடி களஆய்வில் காண முடிந்தது. எனினும், பா.ஜ.க. தரப்பில் கடந்த நவம்பர் 8-ந் தேதி சொன்ன பொருளாதாரக் காரணங்களை இப்போதும் உறுதியான குரலில் முன்வைக்கிறார்கள். 

பா.ஜ.க.வின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் நம்மிடம், ""தேசத்தினுடைய மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையான பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் நாட்டில் 15.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு 1000, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 2004-ஆம் ஆண்டு முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிக அதிக அளவில் ஊழல்கள் நடைபெற்றன. 10 ஆண்டுகளில் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் அளவு 86% அளவிற்கு உயர்ந்தன. ஆனால், இயல்பான சந்தையில் இந்தளவு அந்த நோட்டுகள் புழக்கத்தில் இல்லை. கணக்கில் காட்டப்படாமல் கருப்பு பணமாக புழக்கத்தில் இருந்ததே உண்மை. இதனால்தான், நாட்டில் லஞ்ச ஊழல், விலைவாசி அதிகரித்து  மக்களுடைய செலவுகள் அதிகரித்தன. இவைகளைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட நடவடிக்கைதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை.

மொத்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் கரன்சிகளில் 99% வங்கிக்குத் திரும்பிவிட்ட காரணத்தாலேயே திட்டம் தோல்வியென்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது பணம் திரும்பி கணக்கில் வர எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். இதன்பிறகும் கருப்புப் பணத்தை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரெல்லாம் பணம் செலுத்தினார்களோ அந்த பணம் கணக்கில் காட்டப்பட்டதா இல்லையா என்பதை ஆய்வுசெய்து அவர்களிடம் விளக்கம் கேட்பது தொடர்ந்துவருகிறது.

அதிக அளவில் பணம் வங்கியில் செலுத்தப்பட்ட காரணத்தால் வங்கியில் வைப்புகள் அதிகரித்திருக்கிறது. அதன்மூலம் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த வட்டியில் அதிகக் கடன் கொடுக்கப்படும். வங்கிகளில் முதலீடுகள் அதிகரித்திருக்கிறது. கள்ளநோட்டுப் புழக்கம் குறைந்திருக்கிறது. தற்போது பயங்கரவாத, தீவிரவாத அமைப்புகள் பணமில்லாது தங்களின் நடவடிக்கையை செயல்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் டிஜிட்டல் வழி பணப் பரிமாற்றங்கள் அதிகரித்து, ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு வழிவகுத்திருக்கிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கையால் விலைவாசியும் குறையும்''’என்கிறார் நம்பிக்கை குரலில்.

"பா.ஜ.க. தரப்பு வைக்கும் வாதங்களுக்கு மாற்றாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே' என்று அடுக்கடுக்கான புள்ளிவிவரங்களை முன்வைக்கிறார் பொருளாதார நிபுணர் நரேன். ""“பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கிய இந்த ஒருவருடத்தில் எந்தக் கருப்புப்பண முதலைகளும் சிக்கியபாடில்லை. பணமதிப்பிழப்பு திட்டத்தின் நோக்கம் என்ன என்பதை மத்திய அரசு மாற்றி மாற்றி சொல்லி வந்தது. அது இப்போதும் தொடர்கிறது. கருப்புப் பண ஒழிப்பு என ஆரம்பித்து, தீவிரவாத நிதி குறைப்பு, போலி நோட்டுக்களை நீக்குதல், டிஜிட்டல் இந்தியா, கேஷ்லஸ் இந்தியா என நோக்கங்கள் மாறிக்கொண்டே இருந்தன. ஒருவருட காலத்தில் இதில் எந்தெந்த நோக்கங்கள் நிறைவேறி இருக்கின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

 ரிசர்வ் வங்கி இதுவரை நீக்கப்பட்ட 1000, 500 ரூபாய் தாள்களில் மதிப்பில்  90% வரைக்கும் புதிய ரூ.2000, ரூ.500 மற்றும் ரூ.200 தாள்களாக புழக்கத்தில் விட்டிருக்கிறது. கடந்த நவம்பர் 8-க்கு முன்பு ரொக்கப் பரிவர்த்தனை எந்த அளவிற்கு இருந்ததோ அதே அளவில்தான் இப்போதைக்கும் இருக்கிறது. ஆக கேஷ்லஸ் இந்தியா என்கிற நோக்கம் அடிபட்டு காணாமல் போனது. ரூ. 2,000 தாளை வெளியிட்டு, கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் முன்பிலும் அதிக பணத்தினை பதுக்க உதவியதுதான் மோடி அரசின் சாதனை.

கார்டு பரிவர்த்தனைகள், டிஜிட்டல் வழிமுறைகள் என மக்கள் ரொக்கத்திலிருந்து மின்சாத்தியங்களுக்கு மாறுவார்கள் என அரசு நம்பியது. ஆனால் செப்டம்பர் 2017 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கவனித்தால் அவை பண மதிப்பிழப்பிற்கு முன்பு எப்படி இருந்ததோ அதேநிலையில்தான் இன்றும் இருக்கிறது. ஆக இந்த நோக்கமும் நிறைவேறவில்லை.

கிட்டத்தட்ட 98% புழக்கத்தில் இருந்த பணம் வங்கிகளுக்குள் மீண்டும் வந்ததால் அதை டெபாசிட் செய்தவர்களுக்கு ரூ.9,000 கோடி வரை வட்டி கொடுப்பதும், புதிய தாள்களை அச்சிட கூடுதலாக ரூ.8,000 கோடிகள் செலவிட்டதும் இதில் அடங்கும். காலாண்டு வளர்ச்சி என்பது 7-8% நிலையிலிருந்து, மிகமோசமாக 5.7% என்று வீழ்ந்ததற்கும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை முக்கிய காரணம்.

சிறு, குறு தொழில்கள் முடங்கின. பாதிக்கப்பட்டன. ரொக்கப் பரிவர்த்தனையில் நடக்கும் ஏராளமான சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரங்கள் கண்முன்னே பறிக்கப்பட்டன. பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஹீரோ பிம்பத்திற்காக ஒருநாடே பொருளாதாரச் சீர்குலைவுக்கு தள்ளப்பட்டிருப்பதைத்தான் இந்த ஒருவருடம் நமக்கு உணர்த்துகிறது''’என்கிறார்.

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தையும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மொத்தமும் முறித்திருக்கிறது. ஜி.எஸ்.டி. உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளால் தொழில் நகரங்களும் தவிக்கின்றன. கும்மிருட்டில் பொருளாதாரக் குண்டூசியை தொலைத்துவிட்டு தேடுகிறார் மோடி. கண்முன் தெரியும் இந்த உண்மை நிலவரத்தை மோடியின் பிம்பம் மாற்றும் என நம்புகிறார்கள் பா.ஜ.க.வினர்.

பண மதிப்பிழப்பு நாளான நவம்பர் 8-ந் தேதியை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாகக் கடைப்பிடிக்கின்றன. அதனைச் சாதனை நாளாக கொண்டாட வேண்டிய பா.ஜ.க., கருப்பு தின எதிர்ப்புநாளாக அறிவித்திருப்பதன் மூலம் பொருளாதாரச் சறுக்கலை ஒப்புக்கொண்டுள்ளது.

-சி.ஜீவாபாரதி

சார்ந்த செய்திகள்