/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/operation-sindur-file-building-art.jpg)
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அதாவது 9 இடங்களில் இலக்குகள் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கத் தயார் எனப் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான கவஜா ஆசிப் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியா தனது தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கத் தயார். எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குப் பாகிஸ்தான் முழுமையாகத் தயாராக உள்ளது.
எல்லைப் பகுதிகளில் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு நாங்கள் (பாகிஸ்தான்) தயாராக இருக்கிறோம். அதற்காக எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதற்குப் பாகிஸ்தான் தயாராக உள்ளது. எனவே இதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க முடியும். இதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கினால் அதற்குப் பாகிஸ்தானும் ஒத்துழைப்பு தரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் தரப்பில் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலும் இந்தியாவினுடைய இந்த தாக்குதல் என்பது நியாயமற்றது’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)