Skip to main content

கத்திப் பேசினால் உண்மையாகிடுமா மோடி?

Published on 08/02/2018 | Edited on 08/02/2018
கத்திப் பேசினால் உண்மையாகிடுமா மோடி?

இந்திய நாடாளுமன்றத்தில் இப்படியோர் பிரதமர் இதுவரை கத்திப் பேசியதில்லை. அந்த அளவுக்கு பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல, தொண்டை கிழிய கத்தியிருக்கிறார். இது அவருடைய விரக்தியை வெளிப்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறும் அளவுக்கு சென்றுள்ளது.

தனது அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை அடுக்கடுக்காக அடுக்கி, எதிர்க்கட்சிகளை திணறடிக்க வேண்டிய பிரதமர், தனது இயலாமையை மறைக்க தொண்டையை பெரிதாக்கியிருக்கிறார்.



மெதுவாக பேசினாலே எல்லோர் காதுக்குள்ளும் தெளிவாகக் கேட்கும் வகையில் நாடாளுமன்றத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, மோடி ஏன் இப்படி கத்துகிறார்? பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசினால்தான் அவருக்கு பேச்சு வருமா என்று இன்றைய இளம் தலைமுறையினர் கிண்டல் செய்யும் அளவுக்கு அவர் தன்னைத்தானே கேலிப் பொருளாக்கிக் கொண்டுள்ளார்.

சரி அவர் பேசியதில் முக்கியமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

குடியரசுத்தலைவரின் பேச்சு ஒரு கட்சிக்கு சொந்தமானதல்ல. அதை மதிக்கவேண்டும். எதிர்க்கவேண்டும் என்பதற்காக அதை எதிர்க்கக்கூடாது. நேருவால் இந்தியாவுக்கு ஜனநாயகம் கிடைத்தது என்று நம்பவைக்க முடியாது. பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரத்திலும், தேசத்திலும் இந்தியாவில் ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது என்கிறார் மோடி.

மோடி சொல்வதை உண்மை என்று ஏற்றாலும், இதற்கு முன் பாஜக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் உரையை எப்படி மதித்திருக்கிறது என்பதை இந்த நாடு பார்க்கவில்லையா? மோடி அப்போது முதல்வராக இருந்ததால் தனக்கு தெரியாது என்பாரா? 

அதுபோகட்டும், நேருவால் ஜனநாயகம் கிடைக்கவில்லை என்கிறார். அதுவும் உண்மைதான். ஆனால், இந்தியாவில் மக்களை சாதியால் பிரித்து, அதையே தர்மம் என்று பெயர்சூட்டியதைத்தான் ஜனநாயகம் என்று சொல்ல வருகிறாரா மோடி? படிக்க உரிமையற்று, சில தெருக்களில் நடக்க உரிமையற்று, மேலாடை அணிய உரிமையற்று இருந்தனரே அதைத்தான் ஜனநாயகம் என்கிறாரா மோடி? விலங்குகளுக்கு கிடைத்த உரிமைகூட மக்களுக்குக் கிடைக்காமல் செய்தார்களே பார்ப்பனர்கள், அதைத்தான் ஜனநாயகம் என்கிறாரா மோடி?



அடுத்து இன்னொரு விஷயத்தை சொல்கிறார் மோடி. அதாவது, சர்தார் வல்லபாய் படேல் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தமாக இருந்திருக்கும் என்கிறார். இது நடந்திருக்குமா? காஷ்மீர் என்பது இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்ததா? என்பதையெல்லாம் கவனித்தால், மோடி, தனது விருப்பத்துக்கு அள்ளி விடுகிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

சற்று விவரமாக கூறவேண்டும் என்றால் இந்தியாவுக்கு பிரிட்டிஷ்காரர்கள் விடுதலை கொடுக்கும்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் சொந்தமில்லாமல், 565 சமஸ்தானங்கள் இருந்தன. இவை சுதந்திரமானவை. சத்ரபதி, மகாராஜா, ராஜா, ராஜே, தேஷ்முக், நவாப், என்று பல்வேறு ஆட்சியாளர்களின் தலைமையில் இந்த சமஸ்தானங்கள் இருந்தன. இவை, இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ தாங்கள் விரும்பும் எந்த நாட்டுடனும் இணைந்து கொள்ளலாம். விடுதலை அடைந்த மூன்று மாதங்களில் பாகிஸ்தானுடன் தாமாகவே சில சமஸ்தானங்கள் இணைந்தன.

ஆனால், இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்த வல்லபாய் படேல், ராணுவத்தை கையில் வைத்துக்கொண்டு அந்த சமஸ்தானங்களை மிரட்டினார் என்பதுதான் வரலாறு. பிரிட்டிஷ் ராணுவ பலத்தை நம்பியிருந்த சமஸ்தானங்கள் இப்போது, இந்தியாவின் மிரட்டலை சந்திக்க வேண்டியிருந்தது என்பதுதான் உண்மை. பிரிட்டிஷ்காரன் கொடுத்திருந்த சுதந்திரத்தைக்கூட விடுதலை பெற்ற இந்தியா அந்த சமஸ்தானங்களுக்கு கொடுக்கவில்லை என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும்.

இப்படித்தான் இஸ்லாமியர்களை பெரும்பான்மை ஜனத்தொகையாகக் கொண்டிருந்த காஷ்மீரின் மன்னராக இந்து மதத்தைச் சேரந்த ஹர்சிங் என்பவர் இருந்தார். அவர், இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைய விரும்பவில்லை என்று முடிவெடுத்தார். அவருடைய முடிவை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. ஆனால், படேல் காஷ்மீரை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்தே, பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. காஷ்மீரின் பாதிக்குமேற்பட்ட பகுதியை அது கைப்பற்றியது. படேல் பிரதமராக இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். பாவம் மோடி, அவருக்குத் தெரிந்த வரலாறு பொய்களால் வரையப்பட்டதுதானே. இப்படித்தான் பேசுவார்.

இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியிருந்தால், அதற்கேற்ற திட்டங்களை தீட்டியிருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கும் என்கிறார் மோடி. அதேசமயம், முந்தைய அரசுகளின் பங்களிப்பால்தான் இந்த நாடு இவ்வளவு உயரத்துக்கு வந்திருக்கிறது என்று அவரே பதிலும் சொல்லிக்கொள்கிறார்.

ஆர்எஸ்எஸ்சைப் போல, பாஜகவைப் போல, மக்களை பிரி்த்து, அவர்களுக்கு இடையே சாதி மத மோதல்களை ஏற்படுத்தி, அந்த வெப்பத்தில் குளிர்காயும் கட்சிகள் இருக்கும்வரை அரசுகள் எந்தத் திட்டத்தையும் உருப்படியாக செய்ய முடியாது. 

அணைகளைக் கட்டவும், மின் திட்டங்கள் கட்டவும் பொறியாளர்கள் தேவை, ஏழை மக்களுக்கும் மருத்துவம் கிடைக்க மருத்துவர்கள் தேவை என்று நேரு அறைகூவல் விடுத்தார். ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் பாபர் மசூதியை இடிக்க கரசேவகர்களைக் கேட்டது. ரயில்பெட்டியில் தீ வைத்துவிட்டு, அப்பாவி முஸ்லிம்களை வெட்டிக் கொன்றது. இன்றுவரை பசு மூத்திரத்தை மருந்து என்றுதானே பாஜக சொல்கிறது.



மக்கள் எந்த உணவை உண்ணவேண்டும் என்ற உரிமையைக்கூட மக்களுக்குத் தர விருப்பமில்லாத மோடி அரசு ஜனநாயகம் பற்றி பேசலாமா? மாடுகளை விற்கவோ, வாங்கவோ, கறியாக்கி உண்ணவோ தனி மனிதனுக்கு உரிமையுண்டு என்பதைக்கூட ஏற்காத காட்டுமிராண்டிகளுக்கு வக்காலத்து வாங்கும் அரசாகத்தானே மோடி அரசு இருக்கிறது?

இன்றைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத கையாலாகாத அரசாக இருந்துகொண்டு, தொண்டை கிழிய கத்திப் பேசுவதால், பேசுகிற அனைத்தும் உண்மையாகிவிடும் என்று நினைக்கிறாரா மோடி?

ஆதார் கார்டு திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாரென்றால், நேர்மையில்லாதவர்களும், ஊழல் செய்பவர்களும், இடைத்தரகர்களும்தான் என்கிறார் மோடி. 

2014 தேர்தல் வாக்குறுதியிலேயே ஆதார் திட்டத்தை நிறுத்துவோம் என்றுதானே மோடியும் அவருடைய கூட்டாளிகளும் கூறியிருந்தார்கள். அந்தத் திட்டத்தில் இவர்களுக்கு ஏதோ லாபம் இருப்பதால்தான் அதைத் தொடருகிறார்கள் என்று பொதுமக்களே ரொம்பநாட்களாக பேசிக் கொள்வது இவர்களுக்கு தெரியாதா என்ன? 

உண்மைகள் வெளிப்படும்போது உதறல் எடுப்பதும், உதறலை மறைக்க உரக்கப் பேசுவதும் மனிதர்களின் இயல்புதானே. பாவம் மோடிக்கு இப்போதே 2019 மக்களவைத் தேர்தலை நினைத்து உதறல் எடுக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டார்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்