
திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு மணமகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பூண்டியில் போபட் நோட்டாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் மேவாரா (26). மூன்று சகோதரர்களில் இளையவரான ராம் மேவாராவுக்கு கோட்டாவில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகள் இல்லத்திற்கு ஊர்வலமாக ராம் மேவாரா மற்றும் அவரது வந்துள்ளனர். அன்றைய நாள் இரவு, வெகுநேரம் வரை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ராம் மேவாரா மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார். இந்த விழா முடியவே அதிகாலை 3 மணி ஆகிவிட்டது. அதன் பிறகு, தனது உறவினர்களுடன் உணவருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில், ராம் மேவாராவின் உடல் மோசமடைந்து மயக்கமடைந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ராம் மேவாராவை கோட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ராம் மேவாராவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ததில், அவர் விஷம் அருந்தியது தெரியவந்துள்ளது. இதனை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
மணமகளைப் பிடித்து போய் திருமணம் செய்யப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த ராம் மேவாரா, விஷம் அருந்தியிருக்கிறார் என்ற தகவல் அவரது குடும்பத்தினரையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. ராம் மேவாரா தற்செயலாக விஷம் அருந்தினாரா? அல்லது வேண்டுமென்றே தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.