
மது அருந்தும் பழக்கம் இல்லாத நபர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் முதுநகர் காவல் நிலையத்தில் காலராக பணியாற்றி வருபவர் சுதாகர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருந்தது. சண்முகம் பரிந்துரையின் பேரில் பஞ்சாயத்து செய்வதற்காக அன்னவல்லி பஞ்சாயத்து துணை தலைவர் வைத்தியலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தியாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் சுதாகர் வைத்தியலிங்கத்தின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அதேபோல முதுநகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஏழுமலை வைத்தியலிங்கத்தை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக வைத்தியலிங்கம் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது அதோடு மட்டுமல்லாமல் நள்ளிரவு வரை வைத்தியலிங்கத்தைக் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக வைத்திருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வைத்தியலிங்கம் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். குடிப்பழக்கமே இல்லாத தான் குடித்துவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதனை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், 'காவல்துறையினரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட வைத்தியலிங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அந்தத் தொகையை காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை பாதி தொகையும், காவலர் சுதாகர் பாதி தொகையும் என இருவரிடமும் வசூலித்து இழப்பீட்டு தொகை கொடுக்க வேண்டும்' என பரிந்துரை அளித்துள்ளார்