
திமுக ஆட்சியின் எஞ்சிய ஓராண்டிலாவது பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஈரோட்டில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 17 வயது சிறுமி – பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அரங்கேறும் குற்றச்சம்பவங்களை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஈரோடு மாவட்டத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் ஆட்சியமைத்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முதலமைச்சரும் திமுகவினரும் நேற்று கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில் ஈரோட்டில் சிறுமி ஒருவருக்கு நடைபெற்றிருக்கும் இக்கொடூரச் சம்பவம் பெண்களுக்கு எதிரான திமுகவின் நான்காண்டு கால அவல ஆட்சியை பொதுமக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை தடுக்கவோ, அதற்கு அடிப்படை காரணமாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை கட்டுப்படுத்தவோ கடந்த நான்கு ஆண்டுகளில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, ஈரோட்டில் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, திமுக ஆட்சியின் எஞ்சிய ஓராண்டிலாவது பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.