Skip to main content

மோடி கொடுத்த ஐந்தாம் ஆண்டு அல்வா!

Published on 03/02/2018 | Edited on 03/02/2018
மோடி கொடுத்த ஐந்தாம் ஆண்டு அல்வா!



என்னமோ மோடி அரசின் இந்த பட்ஜெட்டை விவசாயிகள் பட்ஜெட், விவசாயிகள் பட்ஜெட் என்று கூவுகிறார்களே...

விவசாயிகளுக்கு உரத்தையும் மின்சாரத்தையும் இலவசமாகவா கொடுத்துவிட்டார்கள்? அதைத்தானே விவசாயிகள் கேட்கிறார்கள். விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தையும், மானிய விலையில் உரத்தையும் கொடுத்தது கலைஞர் அரசு அல்லவா?

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை காப்பியடித்து பட்ஜெட்டை தயாரித்துவிட்டு ரொம்பத்தான் பெருமை பீற்றுகிறார்கள். குடிசைகளுக்கு இலவச மின் இணைப்பு, வீடுகளுக்கு கேஸ் இணைப்பு, மருத்துவக் காப்பீடு, ஏழைகளுக்கு இலவச வீடு என எல்லாமே தமிழ்நாட்டுக்கு பயன்படாத திட்டம்தானே.

தமிழ்நாடு எப்பவோ நிறைவேற்றிய திட்டங்களை இப்போதான் மோடியே காப்பியடிச்சிருக்கார் என்பதை பாஜக ஆட்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.



விவசாயிகளுக்கான பட்ஜெட் என்று பாஜக ஆட்கள் தம்பட்டம் அடித்தாலும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இந்த பட்ஜெட்டை சந்தேகத்தோடுதான் பார்க்கிறார். நெல் உற்பத்தியாளர்களும், தானிய உற்பத்தியாளர்களும் இந்த பட்ஜெட்டால் பயனடைய மாட்டார்கள் என்று சுவாமிநாதன் கூறியிருக்கிறார். இந்த பட்ஜெட்டால் பயனடையும் விவசாயிகள் யார் என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். அவருடைய சந்தேகமே தீரவில்லை என்றால், இது சாதாரண விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாகத்தானே இருக்க முடியும்?

கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் விசாயிகளின் உயிரைக் காப்பாற்ற அக்கறை எடுக்காமல், நான்கு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வாக்குறுதிகளையும், ஆடம்பர திட்டங்களையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிகளையும்தான் பாஜக அரசு கடத்தி இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கிண்டல் செய்திருக்கிறார்.



விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் என்பது வரப்போகிற குறுவை சாகுபடிக்கு மட்டும்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாள் சீதாராம் யெச்சூரி கூறியிருக்கிறார்.



பொருளாதார வளர்ச்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு, நிதிப் பற்றாக்குறையுடன் பட்ஜெட் போடுகிறவர்கள் நிதியைத் திரட்ட வரியைப் போடவும் பயப்படுகிறார்கள். அதுக்கா பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 80 ஆயிரம் கோடி அளவுக்கு விற்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

முன்னோர் பொக்கிஷமாக சேர்த்து வைத்த பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியாருக்கு விற்று அந்தக் காசில் இந்தப் பிழைப்பு பிழைக்க வேண்டுமா என்று பொருளாதார நிபுணர்கள் கேட்கிறார்கள்.

நாட்டின் பாதுகாப்புக்கு தாங்கள்தான் ஜவாப்தாரி என்பதுபோல படங்காட்டும் பாஜக தலைவர்கள்தான், இப்போது பாதுகாப்புத் துறையிலேயே தனியாரை அனுமதிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார்கள்.

பழங்குடியினர் பகுதியில் ஏகலைவன் பள்ளிகளை தொடங்கப்போவதாகவும் பட்ஜெட்டில் கூறியிருக்கிறார்கள். வேடர்குல சிறுவன் ஏகலைவனுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை இந்தப் பள்ளிகளிலும் இழைத்துவிடாமல் இருந்தால் போதும் என்று பழங்குடி மக்கள் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்.

இந்த பட்ஜெட்டின் மிகச்சிறப்பான அம்சம் என்னவென்றால், திட்டங்களை பெருசாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், போதுமான நிதியை ஒதுக்கவே இல்லை. அந்த நிதியை இனிமேல் வரும் வருவாயில்தான் ஒதுக்க வேண்டும். இப்படித்தான் கடந்த நான்கு ஆண்டுகளாகவும் பட்ஜெட் வாசித்தார்கள்.

80 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்பதை சொல்லவே இல்லை. அனேகமாக வயது முதிர்ந்த பக்கோடா வியாபாரிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் பக்கோடா வியாபாரிகளை உருவாக்க மோடி திட்டம் வகுத்திருக்கிறாரோ என்னவோ?

-ஆதனூர் சோழன்



சார்ந்த செய்திகள்