
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
அந்த வகையில் ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரியான மாவட்ட கூடுதல் மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாப்பா மற்றும் பொதுமக்கள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் பலியாகினர். இந்நிலையில் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய இராணுவம் பயங்கரவாத ஏவுதளங்களைத் தூள் தூளாக்குகிறது. ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் 2025 மே 08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது ஒருங்கிணைந்த துப்பாக்கிச் சூடு நடத்தி, அவற்றைத் தூள் தூளாக்கி, தரைமட்டமாக்கியது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள பயங்கரவாத ஏவுதளங்கள், கடந்த காலங்களில் இந்தியப் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதற்கான மையமாக இருந்தன. இந்திய ராணுவத்தின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை காரணமாகப் பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் திறன்களுக்குக் குறிப்பிடத்தக்க அடியைக் கொடுத்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் பாகிஸ்தானில் உள்ள விமானப் படைத்தளங்களைக் குறிவைத்து இந்தியா தனது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகப் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் அமைந்துள்ள சர்கோதா விமானப்படைத் தளத்தின் மீது இந்தியா தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தீவிர தாக்குதலை அதிகப்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் தற்போது இந்தியாவும் தீவிர தாக்குதலை அதிகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.