Skip to main content

முடக்கபட வேண்டியது இணையதளம் அல்ல... எடப்பாடி ஆட்சிதான்! - பிரேமலதா கண்டனம்!

Published on 24/05/2018 | Edited on 25/05/2018

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்துவர, தேமுதிக மகளீரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

வரலாற்றில்தான் ஜாலியன்வாலாபாத் படுகொலையை பார்த்திருக்கிறோம். தமிழகத்தில் முதல்முறையாக ஜாலியன்வாலாபாத் படுகொலைக்கு இணையாக தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் அவமான சின்னம். 22ம் தேதி தமிழ்நாட்டின் கருப்பு நாள். இன்றைக்கு ஒரு மானை சுட்டாவே தண்டனை கொடுக்கக்கூடிய நாட்டில் இருக்கிறோம். இதில் மனிதர்களை சுடக்கூடிய அதிகாரத்தை தந்தவர் யார்? நீங்க அப்படியே சுட வேண்டுமென்றால் வானத்தை பார்த்து தான் சுட வேண்டும். நெஞ்சை பார்த்து வாயை பார்த்து சுடுவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்?

 

premalatha

 

 

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இணையதளம் முடக்கப்பட்டதாக செய்தியை அறிந்தோம். முடக்கப்பட வேண்டியது இணையதளம் அல்ல. இந்த ஆட்சி. நேற்று எஸ்.பி.யையும், கலெக்டரையும் மாற்றினார்கள். மாற்றப்பட வேண்டியது இந்த அரசுதான். இந்த எஸ்.பி.யையும், கலெக்டரையும் மாற்றுவதால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நடைபெறாது. ஏனென்றால் 100 நாட்களாக அவர்கள் அறவழியில் தான் போராடினார்கள். அந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அவர்கள் நாங்கள் 100வது நாள் பேரணியாக கலெக்டர் அலுவலகத்துக்கு வருகிறோம் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டுதான் வந்தார்கள். இது வேண்டுமென்றே அந்த பேரணிக்கு அனுமதி கொடுத்தார்கள். அலுவலகம் வரை வருவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? முதலிலேயே மக்களை காப்பதற்கும் சட்டத்தை காப்பதற்கும் அவர்கள் முன்கூட்டியே இதை செய்திருக்கலாம். இது திட்டமிட்டு படுகொலை செய்வதற்காக செய்யப்பட்ட விஷயமாக தான் மக்கள் கருதுகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கதக்கது.

 

100வது நாள் பேரணி வருகிறோம் என்று அவர்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டுதான் வருகிறார்கள். அறிவிக்கமால் வரவில்லை. இன்றைக்கு 2000, 3000 போலீசை அனுப்புகிறவர்கள் ஏன் முன்கூட்டியே அனுப்பவில்லை? கலெக்டர் அலுவலகம் வரையும் ஏன் பேரணியை அனுமதிக்கிறீர்கள்? முன்கூட்டியே தடுத்திருக்கலாம். மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு திட்டமிட்டு மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி அடக்குமுறைகளை ஏற்படுத்தி மக்களுக்கு கொலை செய்திருக்கிறார்கள். 11 பேர் இறந்திருக்கிறார்கள் என்றால் ஒரு பேருக்கு 10 லட்சம்  அறிவிக்கிறது இந்த அரசு. வெக்கமாக இல்லை? அப்போ இங்கே ஒரு உயிரின் மதிப்பு 10 லட்சம். 10 கோடி கொடுத்தால் கூட அந்த குடும்பத்துக்கு போன உயிர் திரும்பி கிடைக்குமா? அதிகமான காயத்திற்கு 3 லட்சம், சாதாரண காயத்திற்கு ஒரு லட்சம் என்று சொல்லுகிறார்கள். எது செய்தாலும் காசு கொடுத்து வாயை அடக்க வேண்டும் நினைக்கிறது இந்த அரசு. மக்களுடைய எழுச்சி தமிழ்நாடு முழுக்க இருக்கிறது எனவே மாற்ற வேண்டியது தமிழக அரசும், செயலிழந்துள்ள எடப்பாடி ஆட்சியும் தான்.

 

மக்களின் போராட்டம் அதிகமான காரணத்தில்தான் இணையதளத்தை முடக்குகிறார்கள். தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு கூடாது என்ற சொல்லுகிற நிலைமையை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய ஒரு அரசு, வாங்க வேண்டியதை வாங்கிக்கிட்டு ஸ்டெர்லைட்டுக்கும் அந்த முதலாளிக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நிலையை நாம் இன்றைக்குக் பார்கிறோம். இது உண்மையில் வெட்கபட வேண்டிய விஷயம்.

 

எதற்கு எடுத்தாலும் கேமரா முன்னாடி வந்து நிற்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்த அரசு ஏன் ஸ்டெர்லைட்டில் நடந்த பாதிப்பை பார்க்கவில்லை? எனவே இதன் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த சதியை ஒட்டுமொத்த  தமிழகமும் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கக்கூடியது.

 

மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லுகிறார்கள். இந்த ஆளும் ஆட்சி மக்களுக்காக என்ன செய்தார்கள்? மக்களை சந்தித்து குறைகளை கேட்டீர்களா? ஒளிந்து மறைந்துகொள்ளக்கூடிய ஆட்சி இங்கே நடக்கிறது. இது உண்மையான ஆட்சியாக இருந்தால் மக்களை போய் சந்திக்க வேண்டியது தானே? இன்றைக்கு எல்லோருக்கும் பணம் விளையாடி இருக்கும் இது தான் உண்மை. இந்த மாபெரும் படுகொலைக்கு பின்னால் இருப்பது பணம் என்று தான் எல்லாரும் சொல்கிறார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை. இந்தமாதிரி நிகழ்வு தமிழ்நாட்டில் நடக்காத வண்ணம் மாபெரும் மாற்றம் தமிழ்நாட்டுக்கு வேண்டும்.

 

இன்றைக்குதான் மின் இணைப்பை துண்டித்து இருக்கிறார்கள். விரிவாக்கம் செய்வதை தான் தடை செய்து இருக்கிறார்கள். ஆலையை மூட போகின்றோம் என்ற தகவல் வரவில்லை, ஆகவே இவையெல்லாம் ஒரு கண்துடைப்பு. இந்த ஆட்சி மக்களுக்காக செயல்பட வேண்டும். ஆலைக்காக அல்ல. நிச்சயமாக மக்கள் அதை நிருபிப்பார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.