
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் பேரணி நடைபெறும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை இன்று (10.05.2025) மாலை 05.00 மணிக்குச் சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து எனது (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும்.
இந்த பேரணி தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெறும். இந்த பேரணி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும். தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி இந்திய ராணுவத்திற்க்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று பேரணி நடைபெற உள்ளது.