
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்த வகையில் ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரியான மாவட்ட கூடுதல் மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாப்பா மற்றும் பொதுமக்கள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் பலியாகினர்.
அதே சமயம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதியிடம் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து 2வது முறையாக அந்நாட்டினுடைய துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தரிடமும் மார்க்கோ ருபியோ பேசியுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும், மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆஜித் தோவர் ஆகியோரிடமும் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். அப்போது இரு நாடுகள் இடையே சுமுக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளதாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ், “இந்தியா - பாகிஸ்தான் மோதலில் தலையிடமாட்டோம். இந்த மோதலை நிறுத்துவது எங்கள் வேலை அல்ல. அதே சமயம் மோதலை நிறுத்தும் கட்டுப்பாடும் எங்களிடம் இல்லை. பதற்றத்தைத் தணிக்க இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் முன்வர வேண்டும். இந்த பதற்றத்தை தனிக்க வேண்டுமானால் முயற்சிப்போம். அதாவது அரசியல் ரீதியாகப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி மேற்கொள்வோம். போரைக் கைவிடுமாறு இரு நாடுகளிடமும் நாங்கள் கூற முடியாது. இந்த மோதல் பிராந்திய போராகவோ, அணு ஆயுத போராகவோ மாறிவிடக்கூடாது என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு மாறது எனவும் நம்புகிறோம்.” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.