Skip to main content

மெர்சல் காட்டும் மேஜிக் மேன்!!!

Published on 18/10/2017 | Edited on 18/10/2017
மெர்சல் காட்டும் மேஜிக் மேன்!!!





தலைப்பைப்  பார்த்தவுடன் இது 'மெர்சல்' படத்தின்  மேஜிக்மேன் 'வெற்றி' கதாபாத்திரம் பற்றிய தகவலோ என்று நினைத்திருந்தால், 'ஐ ஆம் சாரி'.  ஆனால் நாம் சந்திக்கப் போகும் இந்த நபர்,  நிஜவாழ்க்கையில் மேஜிக்மேன் கதாபாத்திரத்தை மெர்சலாக செய்துவருகிறார். அவர் தான் ஜான் கென்னடி. இவர் மேஜிக்  செய்வதற்கும் மற்றவர்கள் செய்வதற்கும் என்ன வித்தியாசம் என நீங்கள் கேட்கலாம். மற்றவர்கள் நம் கண்ணைக் கட்டி வித்தை செய்வார்கள். இவரது கண்ணை ஒரு விபத்து கட்டிவிட்டது. அதன் பிறகு, தன் முயற்சியால் வித்தை செய்கிறார்.  ஆம், ஒரு   விபத்தில் தன் பார்வையை இழந்த பிறகு  தன் முயற்சியாலும் பயிற்சியாலும் ஒரு மேஜிக் மேனாக உருவெடுத்துள்ளவர் ஜான். மெர்சல் படத்தில் புறா வரவில்லை.  இந்த மேஜிக் மேன் மெர்சலாக புறாவை வரவைக்கிறார்.

ஜானை ஒரு நண்பர் மூலம் தொடர்புகொண்டு, மறுநாள் அவரின் அலுவலகத்தில் சந்தித்தேன். அங்கு சென்றவுடன், 'ஜான் இருகாங்களா'னு கேட்டேன். 'ஹாய்  ஹரி'னு என் குரல ஞாபகம் வைத்து என் கைகளை குலுக்கி வரவேற்றார். அவரிடம்  
பேசியது...

ஜான்... உங்கள பத்தி சொல்லுங்க?

என் பெயர் ஜான் கென்னடி எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம் என் கூட பிறந்தவுங்க ஒரு அண்ணன்,  ஒரு தம்பி, இரண்டு தங்கச்சி. அப்பா இறந்துட்டாங்க, அம்மா ஊர்ல இருக்காங்க. நான் மட்டும் இங்க இருக்கென். சென்னைக்கு வந்து 14 வருஷம் ஆச்சு.

உங்க பார்வையைப் பறித்த விபத்து...?

2002ல ஒரு  கார் விபத்துல பின் மண்டையில அடிப்பட்டுச்சு. அப்ப தான் என்னோட பார்வைய இழந்தேன். ஆனா பார்வை இழந்து அடுத்த ஒரு வருஷம் மனரீதியா ரொம்ப துவண்டு போய்ட்டேன். அப்புறம் என்ன நானே ஆறுதல் படுத்திகிட்டேன். 





மேஜிக் பண்ணணும் அப்படிங்குற ஆசை எப்ப வந்தச்சு, எத்தன  வருஷமா மேஜிக் பண்றிங்க?

எனக்கு பார்வை போனதுக்கு அப்புறம் தான் இந்த ஆசை.  ஒரு திருமணத்துல மேஜிக் ஷோ நடந்துச்சு. அந்த மேஜிக் மேன் பேசுறத கேட்டேன்.  எல்லாரும்  அவருக்கு  கை தட்டினாங்க. நானும்  தட்டினேன்.  அப்போதான்  நானும் கத்துக்கனும்னு ஆசை வந்துச்சு. ராஜ் டிவில அப்பதான் சுதாகர் மாஸ்டர் மேஜிக் ஷோ பண்ணிட்டு இருந்தாங்க. அவுங்க நம்பர் வாங்கி பேசுனேன். அப்ப
தான் மாஸ்டர், "நீங்க நேர்ல வாங்க, பேசாலாம்"னு சொன்னாங்க. மாஸ்டர்க்கு என்ன மாறி உள்ளவங்களுக்கு சொல்லி தரனும்னு எண்ணம் இருந்திருக்கு. அப்புறம் தினமும் அவர் வீட்டுக்கு போய்டுவேன்.  ஆறுமாதம் போய் கத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட ஏழு வருஷமா மேஜிக் பண்றேன்.  பார்வை இருக்குறவுங்க கூட நான் செய்ற ஒரு சில மேஜிக் செய்ய மாட்டாங்க. ஒரு மேஜிக் ஷோனா 12லேந்து 13 மேஜிக் பண்ணுவன்.

மற்றவர்களுக்கும்  உங்களுக்கும் பயற்சி கொடுக்குற விதம் மாறுபடுமா?

நிச்சயம் மாறுபடும். பார்வை உள்ளவுங்களுக்கு அந்தப்  பொருள பார்த்தா போதும். இப்படி பண்ணணும், அப்படி பண்ணணும்னு சொல்லித்  தந்தா அவுங்க அத பார்த்து பண்ணிடுவாங்க. எனக்கு  அதே பொருளை உணரணும். என் கைய பிடிச்சி அந்தப்  பொருள இப்படி தான் யூஸ் பண்ணணும்னு  தொட்டுப்  பார்க்க வச்சு தான் சுதாகர் மாஸ்டர் சொல்லி தந்தாங்க. நான் அத மைண்ட்ல ஏத்திகிட்டு அதே மாதிரி  செய்வேன். இதுவரை டிவி ஷோஸ்,   பர்த்டே ஃபங்ஷன்ல  பண்ணி இருக்கேன்.

உங்க முதல் மேஜிக் ஷோ எங்க நடந்துச்சு?

என்னோட முதல் மேஜிக் ஷோ சென்னை  ராஜா அண்ணாமலை மன்த்தில்  தான் நடந்துச்சு. எங்க  மாஸ்டர் தான் ஏற்பாடு  பண்ணாங்க. முதல் நிகழ்ச்சி அப்படினு ஒரு பயம் இருந்துச்சு. ஆனா மாஸ்டர் துணையோட நல்லா  பண்ணி முடிச்சேன். மற்றொரு   நிகழ்வுல  எங்க அம்மாவ மேடையில ஏத்தினாங்க. அது மறக்க முடியாத நிகழ்ச்சி.  அப்புறம் வடிவேல் பிள்ளைனு ஒரு  பெரிய மேஜிக் மேன். அவுங்க பரிசா பணம் கொடுத்தாங்க. மற்றோரு மறக்க முடியாத மேடைனா, ஒசூர்ல எய்ட்ஸ் நோயாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில பண்ணது தான்.

மேஜிக்ல உங்க குறிக்கோள் என்ன?

மேஜிக்ல கின்னஸ்  சாதனை செய்யனும். என்னை  மாதிரி  உள்ளவுங்களுக்கு மேஜிக் சொல்லித்  தரணும். சினிமால  ஒரு மேஜிக்மேனா நடிக்க ஆசை. நான் ரஜினி ரசிகர். அவரோட நடிக்கணும்.  இதெல்லாம் தான் என் குறிக்கோள். 




குரு  ராஜா  சுதாகர்



இவ்வளவு தூரம் தன் உழைப்பால் வந்த ஜான், அந்த குறிக்கோள்களையும் அடைவார் என்றே தோன்றுகிறது. ஜான்,  அடிக்கடி குறிப்பிட்ட அவரது குருவுடன் பேச ஆசைப்பட்டு அவரிடம்  கேட்டேன். உடனே கைபேசியில் அழைத்துக் கொடுத்தார். 

"ஜான் போல இருக்குற மாற்றுத்திறனாளிகளுக்கு மேஜிக்  சொல்லித்  தரணுங்குற எண்ணம் முன்னாடியே  இருந்துச்சு. அப்ப தான் ஜான் வந்தாரு. மத்தவுங்களுக்கு சொல்லித்தரத விட கொஞ்சம் கடினம் தான். ஜான், நான் எதிர்ப்பார்த்த மாதிரி  சிறப்பா செய்வாரு. அவருக்கும் எனக்கும் ஒரு புரிதல் இருக்கு. இது மாதிரி  எல்லாருக்கும் அமையுமானு தெரியல. இனி வரும் காலத்தில அவர் என் துணை இல்லாம மேஜிக் பண்ணுவாருன்னு  எனக்கு நம்பிக்கை இருக்கு. நானும் இது மாதிரி  உள்ளவுங்களுக்கு பயிற்சி கொடுக்க ஆர்வமா இருக்கேன். உலகத்திலேயே இரண்டு பேர் தான் பார்வையில்லாம மேஜிக் பண்றவுங்க இருக்காங்க. அமெரிக்காவ சேர்ந்த ரிச்சர்ட் டர்னர். அப்புறம் நம்ம ஜான் தான். எனக்கிருக்கும் பெரிய  ஒரு வருத்தம், அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்க முடியல" என்று கவலையாக கூறிய போது உணர்ந்தேன், சுதாகர் அவரது குரு மட்டுமல்ல, அதற்கும் மேல் என்று.

ஜானை  சந்திச்ச பிறகு, மாற்றுத்திறனாளிகளின்  தன்னம்பிக்கையும் உழைப்பும் நம்மை விட பல மடங்கு அதிகம்னு உணர்ந்தேன். நாம் வெளிச்சத்தில்  வெற்றியை தேடிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் இருளிலிருந்து வெளிச்சத்தை உருவாக்கி, 
வெற்றி காண்கிறார்கள். என்னை வழியனுப்பிய ஜானின் கண்கள் ஒளிர்ந்தன.

ஹரிஹரசுதன்

சார்ந்த செய்திகள்