Skip to main content

பத்ம விருதுகள் பெற்ற வெளிநாட்டவர்கள்

Published on 30/01/2018 | Edited on 30/01/2018
பத்ம விருதுகள் பெற்ற வெளிநாட்டவர்கள் 


இந்தியாவில் ஒவ்வொரு வருடமும்  ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குவோருக்கு நாட்டின் உயரிய விருதுகளான  பத்ம விருதுகள் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் பத்மஸ்ரீ விருது 73 பேருக்கும், பத்மபூஷன் விருது  9 பேருக்கும், பத்மவிபூஷண் 3 பேருக்கும்  என்று  85 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14 பெண்களும் அடக்கம். இந்தியர்களை தவிர்த்து 16 வெளிநாட்டவர்களுக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும், மறைவுக்குப் பின்னர் மூவருக்கும் விருது  அறிவிக்கப்பட்டிருக்கிறது. அண்டை நாடுகளுடனான உறவைப் பேணவும் மேம்படுத்தவும் வெளிநாட்டினருக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள  வெளிநாட்டினர் யார் யார் என்பதைப் பார்ப்போம்... 

அலெக்சாண்டர் கடாகின் 



அலெக்சாண்டர் கடாகின்  இந்தியாவுக்கான  ரஷ்ய தூதராக 1999 முதல் 2004 வரையும் பின்னர் 2009இல் இருந்து 2017இல் அவர் மறையும் வரை இருந்தவர். இவர் இதயகோளாறு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் உயிரிழந்தார். இந்திய-ரஷ்ய உறவில் முக்கிய பங்காற்றிய இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், டெல்லியில் ஒரு சாலைக்கு இவரது பெயர் வைக்கப்பட்டது. இப்பொழுது  இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்குகிறது. 

போன்லாப் கியோகங்னா

லாவோஸ் நாட்டை சேர்ந்த தொல்லியல் அறிஞரான இவர், அங்குள்ள புராதன சிவன் கோவிலைக் கண்டறிந்ததில் இந்திய தொல்லியல் துறைக்கு மிகுந்த உதவியாக இருந்தவர். கம்போடியாவில் உள்ள புகழ்பெற்ற அங்கோர்வாட் கோவிலைப் போன்றுள்ள  இது நெடுநாளாக  புத்தர் வழிபாட்டுத்தலமாக பயன்படுத்தப்படுகிறது. அதன் வரலாறை ஆராய்ந்து அறிந்ததில் இவர் ஆற்றிய பங்குக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது.  


 ஜோஸ் மா ஜோயி 



பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர்  ஜோஸ் மா ஜோயி. இவர்  பிலிப்பைன்ஸின் அதிபருக்கு தொழில்துறை  ஆலோசகராகவும் ஆசிய வணிக ஆலோசனை குழுவின் தலைவராகவும் உள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார். இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. 


 ராம்லி பின் இப்ராஹிம் 



ராம்லி பின் இப்ராஹிம் மலேசிய நாட்டை சேர்ந்த புகழ் பெற்ற ஒடிசி நடன கலைஞர் ஆவார். நாற்பது ஆண்டுகளாக இவர் நடனமாடியும் நடனம் பயிற்றுவித்தும் ஆற்றி வரும் கலைச் சேவைக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. பரதநாட்டியம் உள்ளிட்ட பல நடன வடிவங்களிலும் இவர் விற்பன்னர் ஆவார்.   

டாமி கோஹ் 



டாமி கோஹ் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர். அமெரிக்காவுக்கான சிங்கப்பூரின் தூதராக பணியாற்றியுள்ள இவர், பல்வேறு சர்வதேச செயல்பாடுகளில் சிங்கப்பூரின் பிரதிநிதியாக செயல்பட்டுள்ளார். ஆசியாவின் முக்கிய நாடுகளான சீனா, ஜப்பான், இந்தியாவுடனான சிங்கப்பூரின் உறவில் முக்கிய பங்காற்றுகிறார். இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

ஹுன் மேனி 



ஹுன் மேனி கம்போடியா நாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் கம்போடியா நாட்டின் முன்னாள் பிரதமர் ஹுன் சென்னின் மகன். கம்போடியா இளைஞர் கூட்டமைப்பின் தலைவராகவும் செயலாற்றி வரும் இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

நௌஃப் மர்வாய் 



நௌஃப் மர்வாய் இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த பெண் யோகா பயிற்சியாளர். இவர் சுமார் 13 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் யோகா பயிற்சியளித்து வருகிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு அரேபிய யோகா அமைப்பைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். இவரது  யோகா சேவைக்காக பத்மஸ்ரீ  விருது அறிவிக்கப்பட்டுள்ளது .

டோமியோ மிஸோகாமி 



டோமியோ மிஸோகாமி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆவார். இவர் இந்தியின் மீதும், இந்தியாவின் மீதும் அதிகப்பற்று உடையவர்.2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 10வது  உலக இந்தி மாநாட்டில் டோமியோ பேசுகையில், "இந்தியர்கள் தங்களுக்குள் ஹிந்தியில் பேசாமல்  ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளும் பொழுது எனக்கு கோபம் வருகிறது. அவர்கள் ஹிந்தியில் பேசுபவர்களை ஒரு தாழ்வான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்" என்று கூறினார்.  இவர் ஒஷ்கா பல்கலைகழகத்தில் பஞ்சாபியும், அலகாபாத்தில் ஹிந்தியும் படித்தவர்.  மேலும்,  குரு நானக் எழுதிய "ஜாப்ஜி" புத்தகத்தை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தவர். இவருக்கு தற்போது பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


சோம்தேட் பிஹார் மஹா முனிவாங்க் 



சோம்தேட் பிஹார் மஹா முனிவாங்க் இவர் தாய்லாந்து நாட்டின் 20வது புத்த தலைவராக  கடந்த ஆண்டு தாய்லாந்து மன்னரால் தேர்ந்தேடுக்கப்பட்டார். மேலும் இவருக்கு 2010 ஆம் ஆண்டு புத்தரின் போதனைகளை பரப்பியதற்காக டாக்டர்  பட்டம் அளிக்கப்பட்டது. தற்போது இவரின் ஆன்மிக சேவையை போற்றும் வகையில் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது .


தன்ட் மயின்ட் -யூ 



தன்ட் மயின்ட் -யூ மியான்மர் நாட்டின் வரலாற்றாசிரியர்.  இவர் ஐ .நா வின் மூன்றாவது பொதுச் செயலாளரான ஊ  தாண்டியின் பேரன்.    இதுவரை நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார் . "யாங் கோன்"  பாரம்பரிய மன்றத்தின் நிறுவனராகவும்,  தலைவராகவும் தற்போது செயல்பட்டு வரும் இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்படவுள்ளது.


ஐ நியோமன் நுயற்டா 



ஐ நியோமன் நுயற்டா இவர் இந்தோனேசியாவை சேர்ந்த பிரபலமான சிற்பக்கலைஞர். இவர் 2000 ஆம் ஆண்டு  "நுயற்டா பூங்கா" என்ற  சிற்பப் பூங்காவை திறந்தார். இதில் பலஅழகிய சிற்பங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல். பாலி தீவில்  உள்ள "கருட விஷ்ணு கென்சனா" சிலை இவரால் வடிவமைக்கப்பட்டது. தற்போது இவரின் சிற்பக்கலையை பாராட்டும் வகையில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது 

மலாய் ஹாஜி அப்துல்லா 



மலாய் ஹாஜி இவர் புருனே நாட்டை சேர்ந்தவர்.  இவர் ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி மற்றும் கல்வி வழங்கும் ஒரு அமைப்பை உருவாக்கி சேவை செய்து வருகிறார். அந்த சேவையை போற்றும் வகையில்  தற்போது இவரது சமூக சேவையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஹபிபுல்லோ ராஜபோவ் 



ஹபிபுல்லோ ராஜபோவ் இவர் டைஜிக் தேசிய பல்கலைக்கழக ஹிந்தி பேராசிரியராகவும்,  டைஜிக் - இந்திய நட்புறவு கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார். கடந்த மாதம் இந்திய தூதரகம் "விஸ்வ ஹிந்தி திவாஸ்" என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  தற்போது இவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது .

சந்தூக் ரூய்ட் 



சந்தூக் ரூய்ட் இவர் நேபாள நாட்டைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பார்வை அளித்துள்ளார். உலக வரலாற்றிலேயே அதிக நபர்களுக்கு பார்வை அளித்த மருத்துவர் என்ற சாதனையை புரிந்துள்ளார். இவரின் எளிய கண்புரை அறுவை சிகிச்சை முறையினால் 90% அறுவை சிகிச்சைக்கான செலவு குறைகிறது.  இவரை கௌரவிக்கும் வகையில் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது  .


ங்குயென் டியென் தியேன்  

ங்குயென் டியென் தியேன் வியட்நாமை சேர்ந்தவர். இவர் தேசிய வியட்நாம் பௌத்த மத செயலாளர் ஆவார் .இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது

-ஹரிஹரசுதன்

சார்ந்த செய்திகள்