
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் உள்பட முப்படைகள் இணைந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70 பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அதே சமயம், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில், பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 10 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 38 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் வீர மரணம் அடைந்தார்.
இதனிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அடுத்தக்கட்ட தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்கு ஆயுதப்படைகளுக்கு முழு அதிகாரத்தையும் பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் உள்பட முப்படைகள் இணைந்து நடத்திய ஏவுகணை தாக்குதலில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூர் விமான நிலையத்திற்கு அருகே இன்று (08-05-25) அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, லாகூர் விமான நிலையம் மூடப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதே போல், பாகிஸ்தான் ராணுவ கண்டோன்மெண்ட் அருகே வெடிகுண்டு வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லாகூர் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்த ட்ரோன் தாக்குதல் இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்டவையா? என்பது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.