
பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நேற்று (07-05-25) நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70 பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அதே சமயம், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில், பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 10 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 38 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் வீர மரணம் அடைந்தார். இதனிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அடுத்தக்கட்ட தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்கு ஆயுதப்படைகளுக்கு முழு அதிகாரத்தையும் பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் உள்பட முப்படைகள் இணைந்து நடத்திய ஏவுகணை தாக்குதலில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
பகல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பினுடைய முக்கிய பயிற்சி மையம் மீது இந்தியா நடத்திய தாக்குதலில், அதன் தலைவர் மசூத் ஆசாத்தினுடைய வீடும் தரைமட்டமானது. இதில், மசூத் ஆசாத்தினுடைய குடும்பத்தினர் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் மாலிக் மற்றும் முடாசிர் ஆகியோர் இந்தியாவின் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

இதில் கொல்லப்பட்ட முக்கிய பயங்கரவாதி யாகூப் முஹல் உள்ளிட்ட மற்ற பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு நேற்று முரிட்கேயில் பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இந்த இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பு மற்றும் பாகிஸ்தான் முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், உயிரிழந்த பயங்கரவாதிகளின் உடல்களுக்கு பாகிஸ்தான் தேசியக் கொடி போற்றி அரசு மரியாதை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கின் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு அரசு மரியாதை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.