Skip to main content

ஏலமாம் ஏலம்... ஐபிஎல் ஏலம்!

Published on 29/01/2018 | Edited on 29/01/2018
ஏலமாம் ஏலம்... ஐபிஎல் ஏலம்! 



ஏப்ரல் மாதம் இன்னும் இரண்டு மாதங்களில் வரப்போகிறது. இந்த மாதம் வந்தாலே கிரிக்கெட்  ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு வரவேண்டும் என ஏங்கிக்கொண்டிருப்பார்கள். எதற்காக என்று தெரியுமா. இந்தியாவில் வருடா, வருடம் நடக்கும் ஐபிஎல் போட்டிக்காகதான். மேலும் கூடுதலாக தமிழக மக்களுக்கு இந்த வருடம் கொண்டாட்டமே, இரண்டு வருட தடைக்கு பின்னர் 11 வது ஐபிஎல்லில் விளையாட இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுவும் தல 'தோனி' தலைமையில். தோனி இரண்டு ஆண்டுகள் கழித்து தலைமை ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஐபிஎல்லுக்கு ஆரம்பப் புள்ளியாக இருப்பது ஏலம். சர்வதேச வீரர்கள் மற்றும் உள்நாட்டு ஏ,பி தர வீரர்கள் ஆகியோரை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அடிப்படையாக வைத்து, அதன்பின் ஏலம் நடைபெறும் அதில் வெல்லும்  அணியின் உரிமையாளர்கள் வீரர்களை தங்கள் அணிக்கு எடுத்துக்கொள்வர். இதன் மூலம் வீரர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அதுமட்டுமல்ல ஐபிஎல் பலதரப்பட்ட வீரர்களின் திறமைக்கு மதிப்பளிப்பதாகவும், வாய்ப்பளிப்பதாகவும்  இருக்கிறது. இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கும் போட்டிகளுக்கு, நேற்று முன்தினம் (ஜனவரி 27) ஆரம்பித்து நேற்று இரண்டாவது நாள் ஏலமும் முடிந்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் நடந்த சுவாரசியங்கள் பற்றிய தகவல்கள்... 



  • இரண்டு நாள் ஏலத்தில் 169 பேர் ஐபிஎல்லில் விளையாடுவதற்காக ஒப்பந்தமாகியுள்ளனர். இதற்கு செலவிடப்பட்ட தொகை ஜஸ்ட் 431 கோடியே, 70 லட்சம்தான்.
  •  ஏலத்திற்கு முன்பே ஐபிஎல் அணிகள் தங்களுக்கென 18 வீரர்களை தக்கவைத்திருக்கிறது. இதில்தான் தோனியை சென்னை அணியும், கோலியை பெங்களூர் அணியும், ரோகித்தை மும்பை அணியும் தக்கவைத்திருக்கின்றது.
  • தக்கவைத்த வீரர்களையும் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களையும் சேர்த்தால் மொத்தம் 187 வீரர்கள் இவர்கள் 8 அணிகளுக்காக விளையாடுகின்றனர்.
  • சென்னை (25), மும்பை (25), ஐதராபாத் (25), பெங்களூர் (24), ராஜஸ்தான் (23), பஞ்சாப் (21), கொல்கத்தா (19) என வீரர்கள் அவரவரின்  அணிகளில் இடம்பிடித்துள்ளனர்.
  • ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து வீரர் 'பென் ஸ்டோக்ஸ்' தட்டிச்சென்றார். ராஜஸ்தான் அணி இவரை 12.5 கோடிக்கு  ஏலத்தில் எடுத்துள்ளது.
  • ஏலத்தில் அதிகபட்சமாக எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமையை குஜராத்தைச் சேர்ந்த ஜெயதேவ் உனத்கட் தட்டிச்சென்றார். ராஜஸ்தான் அணி இவரை 11.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
  • சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக விளையாடும் இளம் வீரர்களான லோகேஷ் ராகுலும் ( பஞ்சாப்), மனிஷ் பாண்டேவும் (ஐதராபாத்) 11 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.




  • நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், பார்திவ் படேல், மிச்சேல் ஜான்சன் போன்றவர்கள் முதல் சுற்றில் ஏலம் போகாமல் இரண்டாம் சுற்றிலும் மூன்றாம் சுற்றிலும் குறைந்த விலைக்கே ஏலம் போயினர்.
  • அதேபோன்று நட்சத்திர வீரர்கள் இஷாந்த் ஷர்மா, மார்டின் கப்டில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், லசித் மலிங்கா ஏலத்தில் எடுக்கப்படவே இல்லை. இந்த ஏலத்தில் இலங்கை வீரர்கள் யாரும் பெரிய அளவில் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் விளையாண்ட 'ஜெகதீஸ்' என்ற வீரரை ஐபிஎல்லில் சென்னை அணி எடுத்துள்ளது. ஆப்கன் நாட்டை சேர்ந்த 16 வயது வீரர் முஜீப்பை 4 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
  • முதன் முதலாக ஒரு நேபாள வீரரை (சந்தீப், வயது:17)  இந்த லீக்கில் பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
  • சென்னை அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் இந்த ஆண்டில் இருந்து பஞ்சாப்பிற்காக விளையாட இருக்கிறார். வாஷிங்டன் சுந்தர் என்ற இளம் வயது தமிழக வீரர் சென்னை அணியில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை பெங்களூர் அணி 3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துவிட்டது.

-சந்தோஷ் குமார்

சார்ந்த செய்திகள்