Skip to main content

காக்கிகளை சர்ச்சையில் இழுத்துவிட்ட ராதே மா!

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
காக்கிகளை சர்ச்சையில் இழுத்துவிட்ட ராதே மா!

டெல்லி காவல்நிலையத்தில் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் ஆட்டமும், பாட்டமுமாக அடித்த அட்டாகசங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சம்பந்தப்பட்ட காவல்துறை உயரதிகாரிகள். 



பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பிறந்த ராதே மா-வின் இயற்பெயர் சுக்விந்தர் கவுர். இவரது பக்தர்கள் இவர் சிறுவயதிலேயே கடவுள் அருளுடன் பிறந்ததாக சொல்லிக்கொள்கின்றனர். ஆனால், இவரது சொந்த கிராம மக்களோ, அப்படி ஒன்றும் இருந்ததாக தெரியவில்லை என்று கையை விரிக்கின்றனர். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சுக்விந்தர் கவுருக்கு 17 வயது இருக்கும்போது, மோகன் சிங் என்பவருடன் திருமணம் நடந்தது. அவரது கணவர் கத்தாருக்கு வேலைக்கு சென்றபின், தனது 23 ஆவது வயதில் ராம்தீன் தாஸ் என்பவரது சீடராக இணைந்தார். அவர் தந்த அருள்(!), தீட்சை மற்றும் ‘ராதே மா’ என்ற பெயருக்குப் பின் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமும் ஆகிவிட்டார்.

சினிமா நடிகையைப் போல ஒப்பனை செய்துகொண்டு, உதட்டில் லிப்ஸ்டிக் பளபளக்க இருக்கும் ராதே மா-வுக்கு பக்தர்கள் கூட்டமோ எப்போதும் அமோகமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், சில ஆண்டுகளிலேயே பல குற்றச்சாட்டுகளில் சிக்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு தற்போது மீண்டும் அடுத்த ரவுண்டு ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார் ராதே மா.

சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற ராதே மாவிற்கு, பாதுகாப்பு அளிப்பதற்காக சில காவலர்கள் அவரோடு கூடினர். இவை வீடியோ காட்சிகளாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஒரு வீடியோவில், காவல்துறை உயர் அதிகாரி சஞ்சய் சர்மாவின் இருக்கையில் அமர்ந்து ராதே மா பந்தாவாக போஸ் கொடுத்தபடியும், அவருக்கு அருகில் ராதே மா-வின் துப்பட்டாவைக் கழுத்தில் அணிந்தபடி அந்த காவல்துறை அதிகாரி பவ்வியமாக நிற்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல, மற்றொரு வீடியோவில் காவல்துறை சீருடையுடன் இருக்கும் ஒருவர் பக்திப்பாடல் ஒன்றைப் பாட, அதை ராதே மா கைகளை அசைத்தபடியே ரசிக்கிறார். இவர்களுக்குப் பின்னால் சில காவலர்கள் உற்சாகம் வழிய நின்று கொண்டிருக்கின்றனர்.



இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களோடு நிற்காமல், போலீஸ் தலைமைக்கும் கிடைக்க பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது மேலிடம். பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருந்த ராதே மா, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக காவல்நிலையம் வந்தார். அவருக்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்டது’ என கூறுகிறார்.

சமீப காலங்களாக சாமியார்கள் பலர் சர்ச்சைக்குள் சிக்க, அவர்களை காவல்துறையினர் விரட்டிப் பிடிக்கும் சாகசக் காட்சிகள் அரங்கேறிய நிலையில், தற்போது காவல்துறையினரே சாமியார் ஒருவரால் சர்ச்சைக்குள் சிக்கிய சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியவர்கள் சாமியார்களுக்கு கைகட்டி நின்றால், குற்றங்கள் குறையும் என்ற நம்பிக்கை மக்களுக்கு எப்படி வரும்?

- சின்னமனூர் து.வே.கபிலன்

சார்ந்த செய்திகள்