Skip to main content

சென்னைக்கு அத்தோ ! தஞ்சைக்கு கவுசா !

Published on 21/10/2017 | Edited on 21/10/2017

சென்னைக்கு அத்தோ ! தஞ்சைக்கு கவுசா!


தஞ்சாவூர் என்றாலே நம் நினைவிற்கு வருவது  பெரிய கோவில், அரண்மனை, கும்பகோணம்  டிகிரி காபி, திருவையாறு அசோகா என்று சொல்லிக்கொன்டே போகலாம். ஆனால் இத்தனையும் தாண்டி தற்போதைய தஞ்சாவூரில் பிரபலமாக இருப்பது 'கவுசா' எனும்  உணவு வகை. இது நம்மூர் உணவு போன்று இருக்காது. சீன உணவான நூடுல்ஸ் அதனுடன் முட்டை கோஸ், புளி தண்ணி, பூண்டுப்பொடி, முட்டை, வடை ( நம்மூர் பாணி) அல்லது பேஜோ ( தட்டையாக இருக்கும் பர்மிய உணவு)... இந்த அனைத்தையும் கலந்து சாப்பிடுவது தான் 'கவுசா' (இந்த உணவை பர்மாவில் 'கவுசோ' என்று அழைப்பர்). இந்த உணவுடன் வாழைத்தண்டு சூப்  சேர்த்து சாப்பிட்டால் நாக்கில் சுவை ஒட்டிக்கொண்டு  நம்மை பர்மாவிற்கே அழைத்துச் சென்றுவிடும். அத்தனை  சுவையும், வரலாறும் உடையது இது.




"என்னடா இது சென்னைல இருக்கிற 'அத்தோ' மாதிரி இருக்கே? என்று நினைப்பவர்களுக்கு, ஆம், கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கும் இந்த இரண்டுமே பர்மிய உணவுகள் தான். இந்த இரண்டிற்கும் ஒரு சில வித்தியாசங்கள் உண்டு. ஆனால் வரலாறு ஒன்று தான். 

பர்மாவின் உணவு வகையான 'கவுசா'  இப்போது தஞ்சாவூரில் பரவி இருக்கிறது. இந்த உணவு தற்போதைய உணவுகளைப் போல இணையத்தில்  பார்த்து நம்மூர்களுக்கு வரவில்லை. பல்வேறு வேலைகளுக்காக (நெல் சாகுபடிக்கும், ரப்பர் தோட்டங்களுக்கும்)     'பர்மா'  சென்ற தமிழ் நாட்டு மக்கள், அங்கு  இதனை சுவைத்து,  தங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டனர். இரண்டாம் உலகப்போரின் காரணமாக  1962இல் பர்மா ஆட்சியை  ராணுவம்  கைப்பற்றிய பிறகு,  அவர்கள் சொந்த நாட்டிற்கே அனுப்பப்பட்டனர். இவ்வாறு பர்மாவில் இருந்து தஞ்சாவூர் வந்த மக்கள் கவுசாவையும் கூட்டி வந்தனர். ஆரம்பத்தில் அதனை அவர்கள் சமைத்து சாப்பிட்டு வந்தனர். பிறகு, அதன் சுவையை அனைவருக்கும் படைக்க நினைத்தனர். கவுசா கடைகள் தஞ்சாவூரில்  ஒரு கடையுடன் ஆரம்பித்து தற்போது முப்பதிற்கும் மேற்பட்ட  கடைகள் இருக்கின்றன. 




பர்மா காலனியில் ஒரு இரவு கவுசா கடை 



கவுசா, பார்ப்பதற்கு ஆரஞ்ச், வெள்ளை, பச்சை என்று கண்ணிற்கும் விருந்து படைக்கும் வகையில் இருக்கின்றது. கவுசா கடையில்  மோயிங்கா (சூப்பில் மிதக்கும் நூடுல்ஸ் போன்று இருக்கும்) மற்றும் கவுசா ஃபிரை ( கவுசாவை வறுத்து  தருவது) என்று மேலும் இரண்டு வகை உணவுகள் உண்டு ஆனால் கவுசா தான்  சூப்பர்  ஹிட்.  அரசியல் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் கூட பிரியாணி வாங்கிக்  கொடுப்பது போல  இங்கு சுற்று வட்டாரங்களில் கவுசா கொடுப்பதும் உண்டு  என்று சொல்லப்படுகிறது. முட்டை மற்றும்  பேஜோவுடன் சேர்க்கப்படும் கவுசா  55 ரூபாய் விலை. வாழைத்தண்டு சூப் எவ்வளவு கேட்டாலும் சலிக்காமல் பரிமாறும் குணம் இந்த கடைகளில்  வேலைப்பார்க்கும் அனைவருக்கும்  உண்டு.





யாதும் ஊரே , யாவரும் கேளிர் என்ற வரிகள், இந்த கவுசா சாப்பிடும்போது, அதுவும் தஞ்சாவூரில் உள்ள அந்த தள்ளு வண்டிக்கடைகளில் உணரப்படுவது சுகம் தானே? தஞ்சாவூரை சுற்றிப் பார்க்க வாருங்கள், அப்படியே இந்த  உணவையும் சுவைத்துப்  பாருங்கள். பிறகு தெரியும் ஏன் இதனை பர்மாவிலிருந்து கூட்டிக்கொண்டு  வந்தார்கள் என்று...

சந்தோஷ் 


சார்ந்த செய்திகள்