
திருச்சி விமான நிலையம் அருகே, கோவில் காவலாளியைத் தாக்கிவிட்டு கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகையைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமான நிலையம் அருகே ஸ்ரீ பச்சை நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் காவலாளியாக இருப்பவர் ரத்தினவேல் (63). இவர், வழக்கம்போல் நேற்று (02.02.2021) இரவு காவல் பணியில் இருந்துள்ளார். திடீரென்று பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கருவறை அருகே இருக்கும் கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது இரண்டு கொள்ளையர்கள் அவரை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதில் மயங்கிக் கீழே விழுந்தார். பின் இரண்டு கொள்ளையர்களும் அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தாலிச் செயின், பீரோவில் இருந்த பணம், கவரிங் நகைகள் மற்றும் வெளியே இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ.2,000 பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கண் விழித்த காவலாளி கத்திக்கொண்டே சாலை நோக்கி ஓட, அவரைப் பிடித்த கொள்ளையர்கள் வேஷ்டியால் அவரின் கை, கால்களைக் கட்டிபோட்டுவிட்டு, அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.4,500 பணம் மற்றும் அவருடைய செல்ஃபோன் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனர்.

இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, கைரேகை நிபுணர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.