Skip to main content

எச்சில் இலையில் உருளச் செய்யும் சடங்கிற்கு எதிரான தடை நீடிக்கும்! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 05/05/2025 | Edited on 05/05/2025
Ban on the ritual of rolling saliva on leaves will continue! - Supreme Court orders action

கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் என்ற கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி உள்ளது. சதாசிவர் நினைவு நாளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில்  ஒன்று தான் எச்சில் இலையில் உருளும் சம்பிரதாயம். அக்ரகாரத்தில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு போட்ட இலையில், பிற சாதியினரை உருள வைப்பதே இச்சடங்கு. இறைவனுக்கும் ஆன்மீகத்துக்கும், மனிதத் தன்மைக்கும், சுகாதாரத்துக்கும் எதிரான இச்சடங்கை கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தடை செய்தது.  ஆனால், அதே சடங்கை சென்ற ஆண்டு, மீண்டும் நடத்திக் கொள்ள மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பின் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மூலம் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.

முதலில் கோட்டை விட்ட அரசும் , பின்பு மேல்முறையீட்டு மனுச் செய்தது. அர்ச்சக சங்கத்திற்கு மூத்த வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் ஆஜரானார். அதன்பின், நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு , எச்சில் இலை சடங்கைத் தடை செய்து உத்தரவிட்டது.

அதன்பின், அரங்கநாதன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல் திமுக வழக்கறிஞர் அணியும், தமிழ்நாடு அரசும் , இந்து சமய அறநிலையத்துறையும், கேவியட் மனுத் தாக்கல் செய்யாமல் கோட்டைவிட்டனர். இச்சூழலில், இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு நீதிபதிகள் நரசிம்மா, பக்‌ஷி அமர்வில் விசாரணைக்கு வந்தது.நெரூர் மடம் சார்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். அரங்கநாதன் சார்பில், வழக்கறிஞர் குமணன் ஆஜரானார். கேவியட் தாக்கல் செய்யவில்லை, மூத்த வழக்கறிஞரையாவது ஆஜராகச் சொல்லுங்கள் என கடந்த 3 நாட்களாக அரசிடம் முறையிட்ட நிலையில், இன்று விசாரணைக்கு வந்த தமிழக அரசின் வழக்கறிஞர் அமித் ஆனந்த் ( திவாரி) அவர்கள் கேவியட் இல்லாமையால் வாதிடவில்லை.

ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில், குக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எச்சில் இலைச் சடங்கை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளதை வழக்கறிஞர் குமணன் சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து, நெரூர் மடம் இவ்வாண்டு எச்சில் இலை சடங்கை நடத்த அனுமதி மறுத்த உச்சநீதிமன்றம், குக்கே வழக்குடன், இவ்வழக்கையும் சேர்த்து விசாரிப்பதாக சொல்லிவிட்டது.

இறை, மத, ஆன்மீக நம்பிக்கைகள் வேறு. சடங்கு என்ற பெயரில் தமிழர்கள் மீது இழிவை சுமத்தி பார்ப்பன சாதி மேலாண்மையை நிறுவுவது என்பது வேறு. எந்த பக்தனும் சடங்கின் பெயரால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதை எந்தக் கடவுளும் ஏற்காது. அரசியல் சட்டமும் ஆதரிக்காது. அரசியல் சட்டம் மனித மாண்பை காக்குமே தவிர தாழ்த்தாது. அரசியல் சட்ட காவலனாய் இருக்கும் உயர் நீதிமன்றம் - ஒரு மனிதன் தன்னைத் தானே இழிவு செய்து கொள்கிறேன், எச்சில் இலையில் புரள்கிறேன் - என்பதை மத உரிமையாக அங்கீகரித்து அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

கர்நாடக அரசும் எச்சில் இலை  சடங்கை தடை செய்திருக்கிறது. மூடநம்பிக்கைகளை வைத்துத்தான் பார்ப்பனர்கள் பன்னெடுங்காலமாக தங்கள் ஆன்மீக, சமூக மேலாண்மையை நிலைநாட்டிக் கொள்கின்றனர். பார்ப்பனர்கள் மேன்மையானவர்கள் புனிதர்கள், அவர்கள் சாப்பிட்ட எச்சில் நிலையில் உருண்டால் ஆன்ம பலம் கிடைக்கும் என்று நம்ப வைக்கும் தந்திரமே நெரூர் சடங்கு. சமத்துவத்தை வலியுறுத்தும் தமிழ் ஆன்மீக மரபுக்கு எதிராக, தொடர்ந்து செயல்படும் பார்ப்பன வைதீக ஆரிய  ஆன்மீக மரபு, கோடிக்கணக்கான தமிழ் மக்களை தொடர்ந்து அடிமைத்தனத்தில் நிறுத்தி வைக்க முயலும் நரித்தனமே நெருர் சடங்கு. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கடவுளையே கேள்வி எழுப்பிய  சுயமரியாதை மரபு கொண்ட தமிழக பக்தர்கள் நெரூர் எச்சிலை சடங்கை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

பக்தி இலக்கிய காலத்தில்,  அடிமைத்தனமாக வாழ்வதே லட்சியம் என்பதான கருத்து திட்டமிட்டு பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது. அதற்கு சூத்திர பஞ்சமர்கள்  பயன்படுத்தப்பட்டார்கள். அந்த வரலாறு தான் மீண்டும் நிகழ்கிறது. உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் தடை செய்த நிகழ்வை, ஒரு நீதிபதி மீண்டும் நடத்தச் சொல்லி உத்தரவிட முடியுமா? இரு நீதிபதியின் உத்தரவு பொதுநல வழக்கில் போடப்பட்டது. பொதுநல வழக்கின் உத்தரவு எல்லோரையும் கட்டுப்படுத்தும் தானே?  சதி எனும் உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை, பாலிய திருமணம், அனைத்து இந்துக்களும் அர்ச்சகராக மறுப்பு போன்ற வைதீகத்தின் பெயரிலான சமூக கொடுமைகளை தமிழ் ஆன்மீக உலகம் ஒருபோதும் ஏற்றதில்லை. வள்ளுவர், வைகுண்டர் முதல் வள்ளலார் வரை வலியுறுத்திய சமத்துவ ஆன்மீகத்தையே தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்ளும். அரசியல் சட்ட விரோத, ஆன்மீக விரோத, மனித குலத்துக்கு எதிரான எச்சில் இலை சடங்கை யாரேனும் ஏற்க முடியுமா?

ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியுள்ள பார்ப்பனர்கள் தான், மனித மாண்புக்கு எதிரான இத்தீர்ப்பையும் ஆதரிக்கிறார்கள். உச்சநீதிமன்றம் வரை சென்று தீவிரமாகப் போராடுகிறார்கள். எச்சிலை சடங்கையும் அதை ஆதரிக்கும் கருத்துக்களையும் தடுக்காவிட்டால் தமிழகம், உத்தரப்பிரதேசமாக மாறும். கடும் பொருளாதார நெருக்கடியில்,ஒரு சிலர்  சில ஆயிரங்கள் நன்கொடை வசூலுத்து இக்கடும் பணியைச் செய்கிறோம்.பல நூறு கோடிகள் வைத்திருக்கும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகள் பார்ப்பனீயத்தை அங்குலம், அங்குலமாக எதிர்க்கும் பணியைச் செய்வதில்லை. மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கில், மதுரையில் உள்ள திமுக அரசு வழக்கறிஞர்கள் கேவியட் கூடத் தாக்கல் செய்யவில்லை. தனி நீதிபதியிடம் முறையாக அரசு வாதிடாமல் கோட்டைவிட்ட வழக்கு இது.தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கின் நிலையும் இதுதான் என்பது வருத்தத்துக்குரியது. எச்சில் இலைச் சடங்கை கடுமையாக எதிர்க்க வேண்டிய சேகர் பாபு அவர்கள் வழக்கம் போல், அமைதி காக்கிறார். எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு சமூகப் பாகுபாட்டை விதைக்கும் எச்சில் இலை சடங்கு வழக்கை அரசு சார்பில் முறையாக நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகிறோம் என மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்