
முழுக்க முழுக்க மதுரை மற்றும் அது சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த படங்கள் கொடுத்து வந்த சசிகுமார் பல்வேறு சறுக்கல்களை சந்தித்தார். இதையடுத்து நிதானம் கடைப்பிடித்த அவர், சமீப காலங்களாக நல்ல திரைப்படங்களில் நடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ படம் ரசிகர்கள் மட்டுமல்லாது மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்று பெரும் வெற்றியடைந்தது. அந்த வரிசையில் தற்போது அதேபோன்ற ஒரு ஃபீல் குட் மூவி-யான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் மீண்டும் கோதாவில் குதித்து இருக்கும் சசிகுமாருக்கு வெற்றி கிட்டியதா, இல்லையா?
இலங்கையில் உள்ள வல்வெட்டித் துறையை சேர்ந்த சசிகுமார் குடும்பம் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக அங்கிருந்து தப்பித்து அகதிகளாக ராமேஸ்வரம் வழியாக இந்தியாவுக்கு வந்து சேர்கின்றனர். வந்த இடத்தில் சசிகுமாரின் மனைவி சிம்ரனின் அண்ணன் யோகி பாபு உதவியுடன் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு புலம் பெயர்ந்து வேளச்சேரியில் உள்ள குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து மர்மமான முறையில் தங்குகின்றனர். அந்த சுற்று வட்டாரத்தில் தாங்கள் இலங்கை தமிழர்கள் என்பதை மறைத்துக் கொண்டு மக்களோடு மக்களாக சராசரி வாழ்க்கை வாழ ஆரம்பிக்கின்றனர். இதற்கிடையே ராமேஸ்வரத்தில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்கிறது. அந்த குண்டு வெடிப்புக்கு இலங்கையில் இருந்து தப்பி வந்த ஒரு குடும்பம் தான் காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவர்கள் சசிகுமாரின் குடும்பத்தை தேடிப் பிடிக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நபர்களிடம் சசிகுமாரின் குடும்பம் தங்கள் அடையாளத்தை மறைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றனரா, இல்லையா? போலீசார் சசிகுமாரின் குடும்பத்தை பிடித்தனரா, இல்லையா? உண்மையில் குண்டு வைத்தது யார்? என்பதே ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மீதி கதை.

போர்கள், வன்முறைகள், பொருளாதார வீழ்ச்சி ஆகியவையால் நமது அண்டை நாடுகளில் இருந்து அகதிகள் நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுகின்றனர். அவர்களை அரசாங்கம் மனிதநேயமற்ற முறையில் நடத்தும் விதத்தை உலகம் முழுவதிலும் உள்ள மனிதநேய நபர்கள் கண்டனம் தெரிவித்து வரும் சூழலை இந்த கதையில் எடுத்துக்கொண்டு அதன் ஆழம் குறையாமல் அதே சமயம் ஜனரஞ்சகமான முறையில் மக்கள் மனம் விட்டு சிரித்து ரசிக்கும்படி ஒரு குடும்பங்கள் கொண்டாடும் ஃபீல் குட் குடும்ப படமாக இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைக் கொடுத்து தியேட்டர்களில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். மிகவும் ஆழமான மற்றும் எமோஷனலான காட்சிகளை படத்தில் அப்படியே பல இடங்களில் படர செய்த இயக்குநர் கூடவே அதனுடன் நகைச்சுவையான காட்சிகளையும் ஒன்றிணைத்து எந்த ஒரு இடத்திலும் நெஞ்சை வருடாமல் அதேசமயம் கலகலப்பாகவும் ஜனரஞ்சகமாகவும் குடும்பங்கள் கொண்டாடும் விதமாக விறுவிறுப்பான படமாக இப்படத்தை கொடுத்துள்ளார். எந்த ஒரு இடத்திலும் தேவையற்ற காட்சிகளை எதையும் வைக்காமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவையோ அதைச் சிறப்பான முறையில் வைத்து அதே சமயம் ஒரு குடும்பத்தை பற்றி மட்டுமல்லாமல் சுற்றி இருக்கும் மற்ற குடும்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதில் இருக்கும் கதாபாத்திர தன்மைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அனைத்தையும் ரசிகர்களின் மனதுக்குள் அழகாக உட்புகுத்தி அதை ரசிக்கும்படியும் கொடுத்து சிறப்பான படமாக இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் அபிஷன் ஜீவந்த்.

படத்தின் நாயகன் சசிகுமார் இதுவரை எந்த படத்திலும் பார்க்காத ஒரு சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாகவும் மனைவிக்கு நல்ல கணவனாகவும் இரு வேறு நடிப்பையும் காட்சிகளுக்கு ஏற்றவாறு பிரித்துப் பிரித்து ஏதுவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இதுவரை நாம் பார்த்திராத சசிகுமாரை இந்த படத்தின் மூலம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இவரின் எதார்த்த மற்றும் ஜனரஞ்சகமான நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. நாயகி சிம்ரன் சசிகுமாரின் மனைவியாக வருகிறார் ஒரு நடுத்தர குடும்பத்தின் மனைவி எப்படி நடந்து கொள்வாரோ அதை அப்படியே கண் முன்னிறுத்தி கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் நன்றாக வலு சேர்த்து இருக்கிறார். இவரின் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அந்த நடிப்பை மிகச் சிறப்பாக கொடுத்துப் படத்தின் ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார். சசிகுமாரின் மகன்களாக வரும் மூத்த மகன் மிதுன் ஜெய்சங்கர் மற்றும் இளைய மகன் கமலேஷ் ஆகியோர் படத்தின் இன்னொரு நாயகர்கள் ஆகவே நடித்து கைதட்டல் பெற்று இருக்கின்றனர். மூத்த மகன் மிதுன் மற்றும் குரள் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளிலும் குடும்ப சம்பந்தப்பட்ட எமோஷனல் காட்சிகளிலும் இருவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கின்றனர். குறிப்பாக இளைய மகன் கமலேஷ் செய்யும் சேட்டைகள் படம் முழுவதும் சிரிப்பலையை உண்டாக்கி தியேட்டர்களில் கைத்தட்டல்களால் அதிரச் செய்கிறது. குறிப்பாக சிறுவன் கமலேஷ் செய்யும் சேட்டைகள் ஜோசப் குருவிலா மற்றும் மலையூர் நாட்டாமை பாடல் காட்சிகள் வேற லெவல் அட்ராசிட்டி. இவரின் சேட்டைகள் நிறைந்த நடிப்பு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. மற்றபடி முக்கிய கதாபாத்திரங்களில் வரும் யோகி பாபு, ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, பகவதி பெருமாள், யோகலட்சுமி, போலீஸ் ராம்குமார் பிரசன்னா மற்றும் படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் உட்பட பலர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு தங்கள் நடிப்பு மூலம் எடுத்துச் சென்று இருக்கின்றனர். ஒவ்வொரு காட்சிகளிலும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்து இப்படத்தை வெற்றிப் படமாக மாற்ற முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றனர்.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் ஓகே, பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. எந்தெந்த காட்சிகளுக்கு எந்தெந்த மாதிரியான இசை தேவையோ அதைச் சிறப்பாக கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவில் ஏதோ நம் பக்கத்து வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்ப்பது போல் அப்படியே நம் அக்கம் பக்கத்தை கண்முன் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
கொஞ்சம் மிஸ் ஆனாலும் சீரியல் போன்ற ஒரு உணர்வை கொடுக்கக்கூடிய கதையை கையில் எடுத்துக்கொண்டு அதை சிறப்பான முறையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி ஒரு ஜனரஞ்சகமான எமோஷனல் கலந்த குடும்பங்கள் கொண்டாடும் காமெடி படமாக இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைக் கொடுத்து மக்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாற்றி இருக்கிறார்கள். எப்படியாவது தாங்கள் தொலைத்த வாழ்க்கையை திரும்ப பெற்று விட மாட்டோமா என்ற ஏக்கங்களோடு உலகம் முழுவதும் சுற்றித் திரியும் அகதிகளின் வாழ்க்கை நிலையை உண்மை தன்மைக்கு நெருக்கமான காட்சி அமைப்புகளோடு ஜனரஞ்சகமான முறையில் ஊசி போடும்படி இல்லாமல் சிறப்பான திரைக்கதை மூலம் அவர்களின் வலியையும் அதேசமயம் அழகான வாழ்வியலையும் நம் கண் முன் கொண்டு வந்ததற்காகவே இந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடலாம்.
டூரிஸ்ட் ஃபேமிலி - என்டர்டைன்மென்ட் கேரன்டி!!