
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் உள்ள திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சென்னை உட்பட பல மாவட்டங்களில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் அரசுக்கு அரிசி அரைத்துக் கொடுக்கும் அரிசி ஆலைகளில் அமைச்சர் சக்கரபாணி அதிரடியாகக் களமிறங்கி அங்குள்ள அரிசியில் பழுப்பு, கருப்பு, கல் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆய்வுப் பணிக்குச் சென்ற அமைச்சர் சக்கரபாணி, அங்குள்ள நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிற்குச் சென்றார். அப்பொழுது, லாரிகள் மூலமாக ரேஷன் கடைக்குக் கொண்டு செல்ல லோடுமேன்கள் அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட அமைச்சர், உடனே ஒரு லாரியில் ஏறி, ஆய்வு செய்ய முடிவு செய்தார்.
அப்போது அங்கிருந்த ஒரு லாரியில் அரிசி ஏற்றுவதற்காகப் போடப்பட்டிருந்த ஏணி வழியாக இரும்பு செயினை பிடித்தவாரே லாரியின் மேலே ஏறி, லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை ஒவ்வொன்றாகக் குத்தூசி மூலம் குத்தி அரிசியின் தரத்தை ஆய்வு செய்தார். அதைக் கண்டு அங்கிருந்த லோடுமேன்களும் அதிகாரிகளுமே வியப்படைந்தனர்.