Skip to main content

“மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல். போட்டி” - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Published on 13/05/2025 | Edited on 13/05/2025

 

IPL to resume Official information released

ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதலை  நடத்தியது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.

இதற்கிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. 57 போட்டிகள் நடந்து முடிந்திருந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக எஞ்சிய அனைத்து போட்டிகளையும் காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக பி.சி.சி.ஐ. முடிவு செய்திருந்தது. அதே சமயம் போர் பதற்றம் தொடர்பான நிலைமை சீரான பின்னர் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக பாதுகாப்பு காரணங்கள் கருதி, இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 8ஆம் தேதி போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட புதிய அட்டவணைப்படி வரும் 17ஆம் தேதி (17.05.2025) மீண்டும் ஐ.பி.எல். போட்டி தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் மோதுகின்றன. அந்த வகையில் 13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 தகுதி சுற்று போட்டிகள் என மொத்தம் 17 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

அதே சமயம் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி இடையேயான லீக் ஆட்டமும் மீண்டும் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான போட்டிகள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் ஆமதாபாத் ஆகிய 6 இடங்களில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மே 29ஆம் தேதி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று நடைபெற உள்ளது. மே 30ஆம் தேதி வெளியேற்றுதல் (Elimination) சுற்றும், வரும் ஜூன்  மாதம் 1ஆம் தேதி இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றும், ஜூன் 3ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.